ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகம் (UNODC) ஏற்பாடு செய்துள்ள “Maritime Domain Awareness as Digital Evidence” எனும் பிராந்தியப் பயிற்சிப் பட்டறைக்கு இணையாக, அவ்வமைப்பின் பிராந்திய பிரதிநிதிகள் நேற்று(13), கொழும்பு கடற்படை தளத்தில் அமைந்துள்ள தகவல் ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு (Information Fusion Centre Colombo) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டனர்.
அதன்படி, இந்தியா, பங்களாதேஷ், மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் கடற்படைகள், கரையோரக் காவல் படைகள், அத்துடன் குறித்த நாடுகளின் தகவல் ஒருங்கிணைப்பு நிலையங்கள் மற்றும் கடல்சார் பாதுகாப்புடன் தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டுள்ள பிரதிநிதிகள் 29 பேர் இக்கண்காணிப்பு விஜயத்தில் பங்கேற்றனர்.
இந்த விஜயத்தின்போது, கொழும்பு தகவல் ஒருங்கிணைப்பு நிலையத்தினால் மேற்கொள்ளப்படும் கடல்சார் தகவல்களைச் சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் பகிர்ந்தளித்தல் ஆகிய செயன்முறைகள் தொடர்பாகவும், கடல்சார் சட்டத்தை அமுல்படுத்துதல் மற்றும் விசாரணை நடவடிக்கைகளுக்காக கடல்சார் பரப்பில் (Maritime Domain) இருந்து தரவுகளை முறையான நடைமுறைகளுக்கு அமைவாகச் சேகரித்து, பகுப்பாய்வு செய்து, எதிர்காலத்தில் அவற்றை டிஜிட்டல் சாட்சியங்களாகப் பயன்படுத்துவதற்காகப் பாதுகாத்து வைப்பது தொடர்பாகவும் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், இந்த நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகத்தின் பிராந்திய நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் Sigi Song, Bay of Bengal Programme – Inter-Governmental Organisation (BOBP-IGO) அமைப்பின் ஆலோசகராகப் பணியாற்றும் வைஸ் அட்மிரல் ஜி அசோக் குமார் (ஓய்வு) கலந்துகொண்டனர்.


