யாழ்ப்பாணம், கொடிகாமம், மீசாலை வடக்கு – புத்தூர் வீதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் மீது பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி அவற்றை கைப்பற்றியுள்ளனர்.
நேற்றிரவு சுமார் 11.15 மணியளவில் குறித்த டிப்பர் வாகனங்கள் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற நிலையில், அவற்றை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் வழிமறிக்க முயன்றுள்ளனர்.
எனினும், பொலிஸாரின் சைகையை மீறி டிப்பர் வாகனங்கள் தொடர்ந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, அவற்றை நிறுத்துவதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு, இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், டிப்பர் வாகனங்களின் சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


