Monday, June 8, 2026
spot_img
Homeஉலக செய்திகள்இஸ்ரேலின் தாக்குதலால் ஈரான் ஜனாதிபதிக்கு காயம் -ஜூன் மாதம் இடம்பெற்ற தாக்குதல் குறித்து தற்போது தகவல்கள்

இஸ்ரேலின் தாக்குதலால் ஈரான் ஜனாதிபதிக்கு காயம் -ஜூன் மாதம் இடம்பெற்ற தாக்குதல் குறித்து தற்போது தகவல்கள்

இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஈரான் ஜனாதிபதிக்கு காயமேற்பட்டது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஈரான் ஜனாதிபதி மசூட் பெசெஸ்கியானிற்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானின் அதிஉயர் பாதுகாப்பு பேரவையின் கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த மிகவும் இரகசியமான பகுதியொன்றின் ( நிலத்திற்கு கீழே அமைக்கப்பட்டிருந்தது) நுழைவாயில்கள் மற்றும் அந்த இடத்திற்கு செல்லும் பகுதிகளை இலக்குவைத்து ஜூன் 16ம் திகதி இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டது என ஈரான் அரசாங்கத்தின் பார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து ஜனாதிபதியும் ஏனையவர்களும் அவசர சூழ்நிலைகளின் போது வெளியேறுவதற்கான பகுதி ஊடாக தப்பிச்செல்ல முயன்றனர் அவ்வேளை ஜனாதிபதியின் கால்களில் சிறிய காயங்கள் ஏற்பட்டன என பார் தெரிவித்துள்ளது.

ஈரான் தற்போது இந்த இரகசிய சந்திப்பு குறித்து இஸ்ரேலிற்கு தகவல் வழங்கியது யார் என்பதை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த தகவலை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ள பிபிசி இஸ்ரேலும் இது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை என செய்தி வெளியிட்டுள்ளது.

12 நாள் யுத்தம் குறித்த சமூக ஊடக வீடியோக்கள் ஈரானின் தலைநகருக்கு வடமேற்கே உள்ள மலைப்பகுதி தொடர்ச்சியாக தாக்கப்படுவதை காண்பித்திருந்தன.

இஸ்ரேலிய தாக்குதலின் நான்காம் நாளான்று ஈரானின் முக்கிய தலைவர்கள் காணப்பட்ட பகுதி மீது தாக்குதல் இடம்பெற்றமை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலின் தாக்குதலால் நிலத்திற்கடியில் அமைக்கப்பட்டிருந்த அந்த கட்டிடத்திலிருந்து வெளியேற முடியாத நிலையேற்பட்டது , என தெரிவித்துள்ள ஈரான் ஊடகம் உள்ளே செல்ல முடியாத நிலையும் காணப்பட்டது, உள்ளேயிருப்பவர்களிற்கான காற்றினை வழங்கும் வசதிகள் பாதிக்கப்பட்டன என குறிப்பிட்டுள்ளது.

மின்சாரமும் துண்டிக்கப்பட்டது ஆனால் ஜனாதிபதி தப்பிவெளியேறினார் என ஈரான் ஊடகம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments