சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் அடுத்த மூன்று அத்தியாயங்களினது இறுதிப் போட்டிகளையும் இங்கிலாந்திலேயே நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்க அமைய 2027, 2029, 2031 ஆகிய வருடங்களில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அத்தியாயங்களினதும் இறுதிப் போட்டிகள் இங்கிலாந்தில் அரங்கேற்றப்படும்.
2021, 2023, 2025 ஆகிய மூன்று வருடங்களில் நடைபெற்ற இறுதிப் போட்டிகளை இங்கிலாந்து மற்றம் வேல்ஸ் கிரிக்கெட் சபை வெற்றிகரமாக நடத்தியதை கருத்தில் கொண்டே அடுத்த மூன்று அத்தியாயங்களுக்கான இறுதிப் போட்டிகளை நடத்துவதற்கான அனுமதியை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபைக்கு ஐசிசி வழங்கியுள்ளது.
இந்தக் கூட்டத்தின்போது இடம்பெயர்ந்துள்ள ஆப்கானிஸ்தான் வீராங்கனைகளுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டது.
ஐசிசியின் பிரதித் தலைவர் இம்ரான் கவாஜாவின் மேற்பார்வையில் ஐசிசி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை, கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா ஆகியன கூட்டிணைந்து இதற்கான முயற்சியைத் தொடர்கின்றன.
இந்த திட்டம் உயர் செயல்திறன் கொண்ட முயற்சிகள், உள்நாட்டு விளையாட்டு வாய்ப்புகள் மூலம் கட்டமைக்கப்பட்ட ஆதரவு வழங்குவதையும் இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம், இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2026 ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம் உட்பட முக்கிய ஐசிசி உலகளாவிய நிகழ்ச்சிகளில் ஆப்கானிஸ்தானை பங்குபற்றச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் நிறுவனத்தின் முந்தைய நிலைப்பாட்டை உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐசிசி கூறியுள்ளது.
அடுத்த மூன்று மாத காலத்திற்குள் விரிவான நிருவாக சீர்திருத்தங்களை செய்வதுடன் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்த வேண்டும் எனவும் ஐசிசி வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் நிறுவனமானது பொருத்தமானதாகக் கருதும் நடவடிக்கைகளை எடுக்கும் உரிமையை ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் நிறுவன ம் கொண்டுள்ளதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.


