லண்டனில் இன்று நடைபெறும் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை தமிழக முதலமைச்சர் விஜய் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைக்கவுள்ளார். இந்தப் போட்டியில் நடிகர் அஜித்குமார் உள்ளிட்ட இந்தியாவைச் சேர்ந்த முன்னணி கார் பந்தய வீரர்கள் பங்கேற்கின்றனர்.
தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், நேற்று லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்தார்.
அவருக்கு விமான நிலையத்தில் பிரிட்டன் தமிழ் சங்கத்தின் தலைவர் ஜேக்கப் ரவிபாலன் உள்ளிட்ட பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
இதனைத் தொடர்ந்து லண்டன் பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷாங்க்ரி-லா தி ஷார்ட்’ ஹோட்டலுக்கு விஜய் சென்றார்.
தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதும், உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுமே அவரது பிரிட்டன் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேம்பட்ட உற்பத்தி, மோட்டார் வாகனங்கள், மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களை அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்நிலையில், இன்று சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் திடலுக்குச் செல்லும் விஜய், அங்குள்ள பந்தயச் சுற்றுப்பாதை, உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நேரில் பார்வையிடவுள்ளார்.
இந்தப் போட்டி இன்று இரவு 9.45 மணிக்கு ஆரம்பமாகி, இரவு 11.45 மணிக்கு நிறைவடையவுள்ளது.


