இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நாளை (12) ஆரம்பமாகி, நாளை மறுதினம் (13) நிறைவடையவுள்ளது.
இந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது.
மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இன்று டெல்லி வந்தடைந்துள்ளதுடன், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் நாளை இந்தியா வரவுள்ளார்.
மேலும், தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா, ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.
‘மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு’ என்ற கருப்பொருளின் கீழ் இம்முறை பிரிக்ஸ் மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உலக நன்மையை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு முக்கிய சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் நேர்மறையான மற்றும் அர்த்தமுள்ள கலந்துரையாடல்கள் இடம்பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, புட்டின் மற்றும் ஈரான் ஜனாதிபதி பெசெஷ்கியான் ஆகியோர் பிரதமர் மோடியை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
தற்போதைய சர்வதேச சூழலில் முக்கியத்துவம் பெற்றுள்ள ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் ஈரான் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்த சந்திப்புகளில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை,சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.இதனால், பிரிக்ஸ் மாநாடு சர்வதேச அரசியலில் முக்கிய கவனம் பெற்றுள்ளது.
மாநாட்டை முன்னிட்டு டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


