வியட்நாமின் மத்திய மாகாணத்தில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகளும், வரலாற்றுச் சிறப்புமிக்க பழங்காலத் தளங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வானிலை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, கடந்த அக்டோபர் 27 ஆம் திகதி இரவு வரையான 24 மணி நேரத்தில் வியட்நாமில் வரலாற்றில் முதல்முறையாக சுமார் 1,085.8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தொடர்ச்சியான கனமழை காரணமாக, இன்று (அக்டோபர் 28) வியட்நாமின் ஹியூ நகரத்தின் வரலாற்றுச் சின்னமாக அறியப்படும் பெர்ஃபியூம் நதியின் நீர்மட்டம் 4.62 மீட்டர் (சுமார் 15 அடி) உயர்ந்துள்ளது. யுனெஸ்கோவால் பட்டியலிடப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஹோய் நகரிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகுகள் மூலம் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
வியட்நாமின் வடக்கே உள்ள ஹனோய் மற்றும் தெற்கே உள்ள ஹோ சி மின் ஆகிய நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, வியட்நாம் வெள்ள அபாயமிக்க நாடு ஆகும். அந்நாட்டின் பெரும்பாலான மக்கள் அதிக வெள்ள அபாயமுள்ள பகுதிகளில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.


