நேற்று (30) மாலை இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் – 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று வென்னப்புவ லுணுவில பாலத்திற்கு அருகில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் பிரதான விமானி விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழந்துள்ளதுடன் விபத்து சம்பவத்தின் போது விமானிகள் இருவர் உட்பட 5 விமானப்படை உறுப்பினர்கள் ஹெலிகொப்டரில் இருந்துள்ளனர்.
பிரதேசவாசிகளும் காவல்துறையினரும் இணைந்து அவர்களை உடனடியாக மீட்டு மாரவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 42 வயதான, 3,000 மணித்தியாலங்களுக்கும் மேல் விமானப் பயண அனுபவத்தைக் கொண்ட அனுபவம் வாய்ந்த விமானி என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் மேலும் நான்கு விமானப்படை அதிகாரிகள் காயமடைந்து மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.




