தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 14-ந் தேதி பொது பட்ஜெட்டும், 15-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 17-ந் தேதி முதல் இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, 24-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது.
இந்த நிலையில், புனித வெள்ளியையொட்டி கடந்த 18-ந் தேதி அரசு விடுமுறை என்பதால், சட்டசபை கூட்டம் இல்லை. தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சட்டசபைக்கும் விடுமுறை விடப்பட்டது.
இவ்வாறாக, 3 நாள் தொடர் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் கூட்டத்தில் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. கேள்வி நேரம் முடிந்ததும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.
இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளிக்கிறார். நிறைவாக தனது துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிடுகிறார்.