– ஐங்கரன் விக்கினேஸ்வரா
( இடர் மிகுந்த போர்க் காலத்தில் யாழ்ப்பாணம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழு நிர்வாகியாக இருந்த வி.ரி. சிவலிங்கம் 1992 முதல் 2000 வரை பல ஆண்டுகள் சேவை நடவடிக்கைகளின் பொது நிர்வாகியாக பணியாற்றினார்)
வட புலத்தின் விளையாட்டுத்துறை சார் ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்கவரான வி.ரி. சிவலிங்கம் is 18-04-2025 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
விளையாட்டுத் துறையோடு சட்டக் துறையிலும் இணைந்து கொண்ட வி.ரி. சிவலிங்கம் யாழ் மண்ணில் ஆளுமை மிகுந்தவராக விளங்கினார்.
இறுதிக் காலங்களில் யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதவானாகவும் கடமையாற்றி வந்தார்.
இவர் விளையாட்டுத் துறையில் துடுப்பாட்டம், கால்பந்தாட்டம், நீளம்பாய்தல், உயரம் பாய்தல் என பல்வகை ஆளுமை கொண்டவராக இளமையில் விளங்கினார். அன்றைய காலகட்டத்தில் பல்வேறு தடகள சாதனைகளுக்குச் சொந்தக்காரராகவும் திகழ்ந்தார்.
புகழ்பூத்த விளையாட்டு பரம்பரை:
சட்டக் கல்லூரியில் பயின்று சட்டத்தரணியாக இணைந்த போதும் தனது விளையாட்டுத்துறை மீதான ஈடுபாடுகளைக் குறைத்துக் கொள்ளாத இவர் மரணிக்கும் வரை இலங்கையில் சிறந்த விளையாட்டு வீரராகவும், நீண்ட கால சட்டத்தரணியாகவும் திகழ்ந்தார்.
யாழ்ப்பாணம் நாவலர் வீதியைச் சேர்ந்த வி.ரி. சிவலிங்கம் 1939 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி வி. தம்பி என்பவருக்கு மகனாகப் பிறந்தார். ஆறு சகோதரர்களுடனும் ஒரு சகேதரரியுடனும் எண்மரில் ஒருவராய் வி.ரி. சிவலிங்கம் வாழ்ந்தார்.
தனது கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் பெற்றுக் கொண்ட இவர் விளையாட்டுத் துறையில் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டி கல்லூரிகளுக்கும் யாழ்ப்பாண மண்ணுக்கும் பெருமை சேர்த்தார்.
இலங்கை சட்டக் கல்லூரி சட்டத்தரணி:
உயர் கல்வியின் பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்று சட்டத்தரணியாக 1962 – 1966 கால கட்டத்தில் இருந்து வந்தார். பின்னர் கொழும்பு தொழில் திணைக்களத்தின் வழக்குரைஞர் அதிகாரியாக ஜனவரி 1966 – டிசம்பர் 1974 வரை எட்டு ஆண்டுகள் பணியாற்றினார்.
விளையாட்டுத்திறன் என்பது நியாயமான விளையாட்டு, நெறிமுறை நடத்தை மற்றும் ஒருமைப்பாடு மற்றும் எதிராளியிடம் பொதுவான நல்லெண்ணம் பற்றிய புரிதல் மற்றும் அர்ப்பணிப்பு மிக்கதாகும்.
வி.ரி. சிவலிங்கம் ஒரு தடகள வீரராக முன்னோக்கைக் கொண்டிருக்கவும், சமநிலையைப் பராமரிக்கவும், தனது சக வீரர்களுக்கு சிறந்ததைச் செய்யவும் போதுமான திறமையுடன் விளங்கினார்.
எந்த ஒரு அழுத்த சூழ்நிலையிலும் பொருத்தமான நடத்தைத் தேர்வுகளைச் செய்ய முடிவது பெரும்பாலும் ஒரு வீரரின் குணத்தையும் ஒரு நல்ல விளையாட்டாக இருப்பதற்கான அவரது திறனையும் வெளிப்படுத்தும்.
எளிமையாகச் சொன்னால், இத்தகைய விளையாட்டுத்திறன் மறைந்த வி.ரி. சிவலிங்கம் அவர்களிடம் காணக்கூடியதாக இருந்தது.
சர்வதேச தடகள நடுவர் :
சிறந்த விளையாட்டு வீரரான வி.ரி. சிவலிங்கம், யாழ்ப்பாணம் அமெச்சூர் தடகள சங்கத்தின் தலைவராகவும், இலங்கை அமெச்சூர் தடகள சங்கத்தின் துணைத் தலைவராகவும் பல ஆண்டுகள் பணியாற்றி இருந்தார்.
1980 இல் பாங்காக்கில் சர்வதேச ஒலிம்பிக் குழு மற்றும் சர்வதேச அமெச்சூர் தடகள கூட்டமைப்பு நடத்திய உயர் மட்ட தடகள பயிற்சி கிளினிக்கில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
இரண்டு ஆண்டுகள் தடகளத்திற்கான தேசிய தேர்வாளராகவும், இலங்கை A.A.A இன் ஒழுங்குமுறைக் குழு மற்றும் அரசியலமைப்பு குழுவின் தலைவராகவும் இருந்தார்.
அவர் இலங்கை ஏ.ஏ.ஏ.வின் தகுதிவாய்ந்த நடுவர், மேலும் கொலம்போவில் நடைபெற்ற எஸ்.ஏ.எஃப் விளையாட்டுப் போட்டிகளில் தலைமை நடுவராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ் ரோட்டரி சங்க தலைவர்:
யாழ்ப்பாண ரோட்டரி சங்கத்தின் நீண்ட கால வரலாற்றில் முதல் முறையாக, இந்த சங்கத்தைச் சேர்ந்த ஒரு ரோட்டேரியன், இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள ஹான்ஸ்ஃபோர்டு ரோட்டரி சங்கம் மூலம் ரோட்டரி இன்டர்நேஷனலின் பால் ஹாரிஸ் ஃபெலோ விருதைப் பெற்றுள்ள பெருமை மறைந்த வி.ரி. சிவலிங்கம் அவர்களுக்கு சாரும்.
வி.ரி. சிவலிங்கம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ரோட்டரியில் உள்ளார். கிளிநொச்சி-பரந்தன் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினராகவும், இரு ஆண்டுகள் இந்த சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.
யாழ்ப்பாண ரோட்டரி சங்கத்தின் தலைவராகவும் இரு ஆண்டுகள் இருந்தார்.
1993 ஆம் ஆண்டு யாழ்ப்பாண ரோட்டரி சங்கத்தின் தலைவராக அவர் பதவி வகித்த காலத்தில், ரோட்டரி சங்கத்தின் நிறுவனர் பவுலின் பிறந்தநாளைக் குறிக்கும் முதல் நாள் தபால் அட்டை வெளியிடப்பட்டது.
போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண நகரத்தில் ஏப்ரல் 1993 இல் இலங்கை தபால் தலை சேகரிப்பு பணியகத்தால் இந்த அட்டை வெளியிடப்பட்டது.
இந்த முதல் நாள் அட்டை சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றதுடன் மற்றும் ரோட்டரி சர்வதேசத்தின் தலைவர் மற்றும் ரோட்டரியில் உள்ள பல உலகத் தலைவர்களால் நன்கு பாராட்டப்பட்டது.
செஞ்சிலுவைச் சங்கக் நிர்வாகி:
இடர் மிகுந்த போர்க் காலத்தில் யாழ்ப்பாணம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழு நிர்வாகியாக இருந்தார்.
ஜனவரி 1992 முதல் டிசம்பர் 2000 வரை ஒன்பது ஆண்டுகள் சேவை நடவடிக்கைகளின் பொது நிர்வாகியாக பணியாற்றினார்.
வெற்றி என்பது வேடிக்கையானது. அது கடின உழைப்புக்குக் கிடைக்கும் வெகுமதியாகும். முடிவுகளை வைத்திருக்கும் ஒரு விளையாட்டில் பங்கேற்கும்போது, விளையாட்டின் விதிகளுக்கு உட்பட்டும், விளையாட்டின் உணர்விற்கு உட்பட்டும் வெற்றி பெறுவதற்கு முடிந்த அனைத்தையும் செய்வது அணிக்கு கடமையாகும். வெற்றி என்பது ஒரு அணியின் ஒரே இலக்காக இருக்கும்போது அது எதிர்மறையாக மாறும் என்பதை அறிய வேண்டும்.
வெற்றி என்பது சரியானவர் என்றோ அல்லது மீண்டும் வெற்றி பெறுவீர்கள் என்றோ அர்த்தமல்ல. வெற்றியைக் கொண்டாடுங்கள். ஆனால் வெற்றியை கருணையுடன் கொண்டாடுங்கள்.
நீங்கள் தோற்கடித்த அணி மீது இரக்கம் கொள்ளுங்கள். பணிவு மற்றும் தரத்துடன் வெற்றி பெறுங்கள். எதிரிகளின் முயற்சியையும் அவர்கள் தகுதியான போட்டியாளர்கள் என்பதையும் ஒப்புக் கொள்ளுங்கள் என்பார் வி.ரி. சிவலிங்கம் அவர்கள்.
யாழ் மண்ணில் சட்ட சேவையை ஜனவரி 2000 முதல் இறக்கும் வரை கடந்த 25 ஆண்டுகளாக சட்டத்தரணி – நோட்டரி பொது/மேலாண்மை ஆலோசகராகும் பணிபுரிந்து வந்தார் என்பது நினைவிருக்கலாம்.
வி.ரி.மகாலிங்கம் பிறிமியர் லீக்:
இலங்கையின் புகழ்பூத்த விளையாட்டுததுறை ஆளுமைகளுள் ஒருவரும், தசாப்தம் பல தாண்டிய வீரனுமாகிய வி.ரி மகாலிங்கம் ஞர்பகார்த்தமாக “வி.ரி.மகாலிங்கம் பிறிமியர் லீக் 20-20 துடுப்பாட்டத் தொடர் 2017 ஆண்டு முதல் நடைபெறுவதற்கு முன்னோடியாக விளங்கியவர் வி.ரி.சிவலிங்கம் ஆவார்.
யாழ்மாவட்ட கிரிக்கெட் சங்கமும், வி.ரி.மகாலிங்கத்தின் குடும்பத்தினரான அவரது சகோதரர் வி.ரி.சிவலிங்கத்தின் அனுசரணையுடன் இந்த கிரிக்கெட் சுற்றுத் தொடர் 2017 ஆண்டு முதல் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
வி.ரி.சிவலிங்கம் இலங்கையின் மூத்த சட்டத்தரணிகளுள் ஒருவராகத் திகழ்ந்த அவரது முழுமையான நிதிப்பங்களிப்புடன் இந்தப் போட்டிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
2017 ஆம் ஆண்டுக்கான “வி.ரி.மகாலிங்கம் பிறிமியர் லீக் சுற்றுப் போட்டியில்” இறுதியாட்டத்துக்கு யாழ். பல்கலைக்கழக அணியும் திருநெல்வேலி ரி.சி.சி விளையாட்டுக் கழக அணியும் தெரிவாகின.
அரையிறுதிப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக அணியை எதிர்த்து சென்றலைற் விளையாட்டுக் கழகமும் திருநெல்வேலி ரி.சி.சி அணியை எதிர்த்து அரியாலை மத்திய விளையாட்டுக் கழக அணியும் மோதின.
யாழ் மண்ணில் விளையாட்டுத் துறையின் வழிகாட்டியாய் திகழ்ந்த ஓர் பல்துறை ஆளுமையாளரை தற்போது இழந்துள்ளது.
யாழ் மத்திய கல்லூரியின் மைந்தனாகவும், யாழ் இந்துக் கல்லூரியின் வீரனாகவும் விளங்கிய வி.ரி.சிவலிங்கம் விளையாட்டுத்துறை சமூகத்தில் பெருஞ் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.