Saturday, April 19, 2025
spot_img
Homeஇலங்கை செய்திகள்மரம் நடுகையின் அவசியத்தை தற்போதைய காலநிலை எமக்கு உணர்த்தியிருக்கின்றது - வட மாகாண ஆளுநர்

மரம் நடுகையின் அவசியத்தை தற்போதைய காலநிலை எமக்கு உணர்த்தியிருக்கின்றது – வட மாகாண ஆளுநர்

மரம் இல்லாவிட்டால் மனிதன் வாழ முடியாது. ஆனால் மனிதன் இல்லாவிட்டால் மரங்கள் சிறப்பாக வாழும். மரம் நடுகையின் அவசியத்தை தற்போதைய காலநிலை எமக்கு உணர்த்தியிருக்கின்றது. இதை தன்னார்வமாக முன்னெடுக்கம் கிறீன் லேயர் சுற்றுச்சூழல் அமைப்புக்கு எமது மாகாண மக்கள் சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

கிறீன் லேயர் அமைப்பின் ஏற்பாட்டில் பத்தாயிரம் நெல்லிக் கன்றுகளை நடுகை செய்யும் செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கோப்பாய் பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (16) இடம்பெற்றது.

நிகழ்வில் தலைமையுரையாற்றிய பிரதேச செயலர் ச.சிவஸ்ரீ, அரசாங்கத்தின் தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தின் முக்கிய அங்கத்தினுள் ஒன்றாக மரம் நடுகையும் இருக்கின்றது. கடந்த காலங்களில் எமது பிரதேசத்தில் மரங்கள் அழிக்கப்பட்டளவுக்கு அவை நடுகை செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து கிறீன் லேயர் அமைப்பின் நிறுவுனர் பா.சசிக்குமார் தனது உரையில், எமது பிரதேசத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுகை செய்யும் தனது இலக்கை கடந்த ஆண்டு அடைந்துள்ளதாகவும், தற்போது 10 லட்சம் மரக்கன்றுகளை நடுகை செய்யும் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் நெல்லி மருத்துவக் குணம் உடையது மாத்திரமல்லாது பொருளாதார ரீதியில் வருமானத்தை ஈட்டித்தரும் என்பதையும் சுட்டிக்காட்டினார். உப்புநீரை நன்னீராக்கக் கூடிய தன்மையும் நெல்லி மரத்துக்கு உள்ளது எனத் தெரிவித்த அவர், வீடுகளில் வளர்ப்பதற்கு அது பொருத்தமானது என்பதையும் குறிப்பிட்டார். சருமங்கள் சுருங்குவதால் ஏற்படும் பாதிப்புக்கு நெல்லி மிகச் சிறந்த மருந்து என்பதால் வெளிநாடுகளில் இதன் பெறுமதி அதிகம் என்று சுட்டிக்காட்டியதுடன், நீரிழிவுக்கும் இது சிறந்ததொன்று குறிப்பிட்டார்.

பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில், மரங்கள் செழிப்பாக இருக்கின்றமை வளமான நாட்டுக்கான அடையாளம். எமது மாகாணத்தில் கடந்த பல வருடங்களாக மரங்கள் பல தரப்புக்களாலும் நடுகை செய்யப்பட்டாலும் அவை உரிய பராமரிப்பு இல்லாமலும் வேறு பல காரணங்களாலும் உயிர்தப்பவில்லை. ஆனால், அண்மைக்காலமாக அப்படியில்லாமல் மரம் நடுகையுடன் நின்றுவிடாமல் அதனைப் பராமரிப்பதிலும் கவனம் செலுத்துகின்றனர்.

கிறீன் லேயர் அமைப்பின் சசிக்குமார் ஆரம்பத்தில் தனியொருவனாகவே மரம் நடுகையை முன்னெடுத்திருந்தார். இன்று அவர் தனது இலக்கை விரிவுபடுத்தி இந்தச் செயற்றிட்டத்தில் பலரையும் உள்ளீர்த்திருக்கின்றார். எமது தேசத்தை வளமாக்க அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு பாராட்டுகின்றேன்.

அதேபோல பிரதேச செயலர் சிவஸ்ரீயும் தெல்லிப்பழையில் பிரதேச செயலராகக் கடமையாற்றிய காலத்தில், மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி என்பனவற்றை சிறப்பாக முன்னெடுத்தவர். அப்படிப்பட்ட ஒருவர் இருக்கின்ற பிரதேச செயலர் பிரிவில் மரம் நடுகையை முன்னெடுத்துள்ளீர்கள். அதுவும் சிறப்பாக வெற்றியளிக்கும்.

இப்போது ஒவ்வொரு தாழமுக்கத்தை தொடர்ந்தும் எமது மாகாணத்தின் வளி மாசடைகின்றது. அயல் நாடுகளிலிருந்து வரும் காற்றால் இந்த நிலைமை ஏற்படுகின்றது. எதிர்காலத்தில் இந்த நிலைமைகளை ஓரளவுக்கேனும் தணிப்பதற்கு நாம் இப்போதே மரங்களை நடுகை செய்யவேண்டும், என்று ஆளுநர் வலியுறுத்தினார்.

ஆளுநரால் பயனாளிகளுக்கு நெல்லி மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், கோப்பாய் பிரதேச செயலக வளாகத்தில் நெல்லி மரக்கன்றையும் ஆளுநர் நடுகை செய்தார்.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments