ஜார்கண்டின் குந்தி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் நரேஷ் பெங்கிரா (வயது 25). அதே பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுடன் லிவ்-இன் உறவில் இருந்து வந்துள்ளார்.
நரேஷ் தமிழகத்தில் உள்ள கசாப்பு கடையில் வேலை செய்து வந்துள்ளார். அவருடன் 2 ஆண்டுகளாக அந்த இளம்பெண் உறவில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், சில காலத்திற்கு முன், ஜார்கண்டுக்கு திரும்பிய நரேஷ், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், அதுபற்றி லிவ்-இன் உறவில் இருந்த பெண்ணிடம் எதுவும் கூறவில்லை. இதன்பின்பு, மனைவியை ஊரிலேயே விட்டு விட்டு, மீண்டும் தமிழகத்திற்கு வந்து அந்த இளம்பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார்.
இந்த நிலையில், அந்த பெண் நரேஷிடம் சொந்த ஊருக்கு செல்வோம் என தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்துள்ளார். இதனால், அவர்கள் இருவரும் ராஞ்சி நகருக்கு சென்று, ரெயில் ஒன்றை பிடித்து நரேஷின் ஜோர்டாக் கிராமம் நோக்கி சென்றுள்ளனர்.
ஆனால், முன்பே திட்டமிட்டபடி, ஆட்டோவில் பெண்ணை ஏற்றி சென்ற நரேஷ் வீடு அருகே நிற்கும்படி கூறி விட்டு, வீட்டுக்குள் சென்று ஆயுதங்களை மறைத்து எடுத்து வந்துள்ளார். இதன்பின்பு, அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, துப்பட்டா கொண்டு அவரை கொலை செய்து, உடலை 50 துண்டுகளாக்கி இருக்கிறார்.
வனவிலங்குகளுக்கு இரையாக அவற்றை விட்டு, விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி மனைவியுடன் வாழ தொடங்கியிருக்கிறார். ஆனால், அந்த பகுதியில் இருந்த நாய் ஒன்று பெண்ணின் கையுடன் சுற்றி திரிந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து போலீஸ் சூப்பிரெண்டு அமன் குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த 24-ந்தேதி இந்த சம்பவம் பற்றி தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், நரேஷ் கைது செய்யப்பட்டார். அவர் தமிழகத்தில் கசாப்பு கடையில் வேலை செய்து வந்துள்ளார் என காவல் ஆய்வாளர் அசோக் சிங் கூறியுள்ளார். அதில் நிபுணத்துவம் பெற்றவர் என்றும் அவர் கூறியிருக்கிறார். லிவ்-இன் உறவில் இருந்த காதலியை கொலை செய்த விவரங்களை அவர் ஒப்பு கொண்டிருக்கிறார். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2022-ம் ஆண்டு டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற இளம்பெண், லிவ்-இன் உறவில் இருந்த காதலர் அப்தப் பூனாவாலாவால் பல துண்டுகளாக ஆக்கப்பட்டு வன பகுதியில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழலில், இதேபோன்றதொரு சம்பவம் ஜார்கண்டில் நடந்து மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.