தமிழகம் உள்பட நாடு முழுவதும் 19 மாநிலங்களில் புதிய தலைவர்களை நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளிலும் பா.ஜனதா தேசிய தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், தமிழக பா.ஜனதா மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நாளை நடைபெற உள்ளது. இதற்கான விருப்ப மனுக்களை இன்று சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கான விருப்ப மனுக்களையும் தாக்கல் செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை, மாநில துணைத்தலைவரும், தேர்தல் அதிகாரியுமான சக்ரவர்த்தி வௌியிட்டார். இந்தநிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் பதவிக்கான விருப்ப மனு தாக்கல் சென்னையிலுள்ள கமலாலயத்தில் தொடங்கியது. பா.ஜ.க. தலைவர் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் மாலை 4 மணி வரை நடைபெற்றது.
இந்தநிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் பதவிக்கு தேர்தல் விருப்பமனு துவங்கிய நிலையில் இதுவரை யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்பமனு தாக்கல் செய்து உள்ளார். நயினார் நாகேந்திரன் விருப்ப மனுவில் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா ஆகியோர் பரிந்துரை செய்து கையெழுத்திட்டனர்.வானதி சீனிவாசன், கனகசபாபதி, வி.பி.துரைசாமி, பொன் பாலகணபதி உள்ளிட்டோர் பரிந்துரை செய்தனர்.
இதற்கிடையில், நயினார் நாகேந்திரனுக்கு மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்ய கட்சி தலைமை அனுமதி வழங்கியிருந்த நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்படி, தமிழ்நாடு பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பாஜக மாநில தலைவர் தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்தபின் நயினார் நாகேந்திரனெ செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கட்சியின் அறிவுரைப்படி வேட்புமனு தாக்கல் செய்தேன். 10 ஆண்டு உறுப்பினராக இருந்தால்தான் போட்டியிட முடியும் என்ற விதி குறித்து அதிகாரிகளிடம்தான் கேட்க வேண்டும் என்றார்.
இதனிடையே நாளை(ஏப்.12) மாலை பாஜக மாநிலத் தலைவர் அறிவிப்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு பாஜக ஏற்பாடு செய்துள்ளது. தலைவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நிகழ்ச்சியில் 1,700 பேர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.