பிரதமர் மோடி இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன் ஒரு பகுதியாக இன்று காலை அவர் விமானத்தில் தாய்லாந்து நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். அவர் அந்நாட்டில் நடைபெறும் 6-வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இதன்பின்பு இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார்.
இதுபற்றி அவர் தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், அடுத்த 3 நாட்களுக்கு தாய்லாந்து மற்றும் இலங்கை நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன்.
இந்த நாடுகள் மற்றும் பிம்ஸ்டெக் நாடுகளுடன், இந்தியாவின் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நான் பயணம் மேற்கொள்கிறேன். பாங்காக்கில், பிரதமர் பேடாங்டம் ஷினவத்ராவை சந்தித்து, இந்தியா மற்றும் தாய்லாந்து நட்புறவு பற்றி முழு அளவில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளேன்.
இதன்பின்னர், நாளை நடைபெறும் பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளேன். தாய்லாந்தின் அரசர் மகா வஜிரலங்கோமையும் சந்திக்க உள்ளேன் என்று தெரிவித்து உள்ளார்.
அவர் தொடர்ந்து வெளியிட்ட பதிவில், இலங்கைக்கான என்னுடைய பயணம் 4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை அமையும். இந்தியாவுக்கு வருகை தந்த ஜனாதிபதி அனுரா குமர திசநாயகேவின் பயணம் வெற்றியடைந்ததன் தொடர்ச்சியாக என்னுடைய இந்த பயணம் அமைகிறது.
இந்தியா மற்றும் இலங்கை இடையேயான பன்முக தன்மை கொண்ட நட்புறவை பற்றி நாங்கள் மறுஆய்வு செய்து, ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை பற்றி ஆலோசனை மேற்கொள்வோம். பல்வேறு கூட்டங்களில் பங்கேற்பதற்காக காத்திருக்கிறேன் என அவர் தெரிவித்து உள்ளார்.