கடந்த 2022-ம் ஆண்டு, கார்த்தியின் நடிப்பில் வெளியான படம் ‘சர்தார்’. இதில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் கார்த்தி. இந்த படத்தின் வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த இரண்டாம் பாகத்தில் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
முதலில் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், தற்போது அவர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சாம் சி.எஸ் பணிபுரிந்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சர்தார் 2 படத்தின் டீசர் வெளியீடு விழா நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் கார்த்தி, ‘எஸ்.ஜே.சூர்யாவுக்கு எவ்வளவு தீனி கொடுத்தாலும் பத்தாது ‘ என்று கூறினார். அதாவது, ‘எஸ்.ஜே.சூர்யா சார் செட்டில் இருக்கும் போது அவரை பற்றி சொல்லவே வேண்டாம். அவரது நடிப்பிற்கு எவ்வளவு தீனி கொடுத்தாலும் பத்தாது. படத்திற்காக அடுத்தது என்ன செய்ய வேண்டும் என கேட்டுக் கேட்டு அவர் செய்வதை பார்த்தால் பிரம்மிப்பாக இருக்கும். அவர் செட்டில் இருக்கும் போது நாங்கள் யாரும் செல்போனையே எடுக்க மாட்டோம். எஸ்.ஜே.சூர்யாவிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம்” என்று அந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்