கனடாவின் வடமேற்கு ஒன்ராறியோ பிராந்தியத்திலுள்ள பூர்வீகக் குடியிருப்புகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட 10 மாத கால இரகசிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் மூலம், சுமார் 4.358 மில்லியன் டொலர் பெறுமதியான போதைப்பொருட்கள் மற்றும் 315,000 டொலர் ரொக்கப் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
‘நிஷ்னாவ்பே அஸ்கி’ பொலிஸ் சேவையினால் முன்னெடுக்கப்பட்ட ‘புரொஜெக்ட் பேக்ட்ரொப்’ எனும் இந்த விசேட நடவடிக்கையின் முடிவுகள், வியாழக்கிழமை தண்டர் பே நகரிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டன.
ஃபெண்டானில், கொக்கெய்ன், கிராக் கொக்கெய்ன், ஒக்ஸிகோடோன், கிரிஸ்டல் மெத், ஹைட்ரோமார்போன், மார்பின் மற்றும் புப்ரெனோர்பின் ஆகிய போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 15 துப்பாக்கிகள் மற்றும் 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
42 தேடுதல் ஆணைகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில், 34 தொலைதூரப் பூர்வீகக் குடியிருப்புகள் மற்றும் அதனை அண்டிய போதைப்பொருள் கடத்தல் மையங்களாகச் செயற்பட்ட நகரங்களிலிருந்து 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் மீது 172 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தலைவர்கள் கருத்து இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய நிஷ்னாவ்பே அஸ்கி தேசத்தின் தலைமைத் தலைவர் அல்வின் ஃபிட்லர், “இது வெறும் 10 மாத காலப்பகுதியில் கைப்பற்றப்பட்டவை மட்டுமே. எமது சமூகங்களுக்குள் ஊடுருவும் போதைப்பொருள் மற்றும் பணத்தில் இது பாதிகூட இருக்காது.
பொதுமக்களின் பாதுகாப்பிற்கான தேவை அதிகரித்து வருகிறது” எனக் கவலை தெரிவித்தார். பொலிஸ்மா அதிபர் டெரி ஆம்ஸ்ட்ராங் கூறுகையில், “4 மில்லியன் டொலருக்கும் அதிகமான போதைப்பொருட்களைக் கைப்பற்றியிருப்பது எமது சமூகங்களுக்குக் கிடைத்த பாரிய வெற்றியாகும்.
குடும்பங்களின் உணவுக்காகவும், குளிர்காலத்தில் குழந்தைகளின் காலணிகளுக்காகவும் செலவிடப்பட வேண்டிய பணம் இவ்வாறு போதைப்பொருட்களுக்குச் செலவிடப்படுவதை இது தடுத்துள்ளது” எனத் தெரிவித்தார்.
ஒன்ராறியோ அரசாங்கத்தின் நிதியுதவியுடன், ஒன்ராறியோ மாகாண பொலிஸாரின் விசேட பிரிவுகள் மற்றும் கனடா வருவாய் முகவர் நிலையம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.


