Wednesday, November 25, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவின் அதிவேக ரயில் திட்டத்துக்கு எதிராகப் போராட்டம்

கனடாவின் அதிவேக ரயில் திட்டத்துக்கு எதிராகப் போராட்டம்

கனடாவில் முன்னெடுக்கப்படவுள்ள அதிவேக ரயில் திட்டத்திற்காகத் தனியார் காணிகளை அரசாங்கம் கையகப்படுத்துவதற்கான அதிகாரங்களை விரிவுபடுத்தும் புதிய சட்ட முன்மொழிவுக்கு எதிராகப் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, ஒன்ராறியோ மாகாணத்தின் ரைடோ லேக்ஸ் (Rideau Lakes) பகுதியில் அமைந்துள்ள சாஃபீஸ் லொக்ஸ் (Chaffeys Locks) கிராம மக்கள், குறித்த ரயில் திட்டத்தினால் தமது வாழ்விடங்கள் பாதிக்கப்படலாம் எனக் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஆறு மாதங்களாக ஒவ்வொரு சனிக்கிழமையும் எமானுவேல் ஃபுல்டாவர் (Emanuele Fuldauer) உள்ளிட்ட சிறிய குழுவினர், கிராமப்புற நெடுஞ்சாலைகள் சந்திக்கும் பகுதியில் ஒன்றுகூடி அதிவேக ரயில் திட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்போது, சிவப்பு வட்டத்தால் குறுக்கிடப்பட்ட ‘ALTO’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் அவர்கள் ஏந்தியுள்ளனர்.

ஓய்வுபெற்ற தாதியரான எமானுவேல் ஃபுல்டாவர், தாம் இந்தச் சமூகத்திற்கும் நாட்டிற்கும் மக்களுக்கும் தம்மால் முடிந்த பங்களிப்பை வழங்கியுள்ள நிலையில், தற்போது இவ்வாறு நடத்தப்படுவது மிகுந்த வேதனையையும் கோபத்தையும் ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

குறித்த அதிவேக ரயில் பாதைகளில் ஏதேனும் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டால், தமது கிராமம் ஏனைய பகுதிகளுடனான தொடர்பை முற்றாக இழக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

காணிகளை கையகப்படுத்தும் அதிகாரங்கள் விரிவாக்கம்

கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட கனடாவின் அதிவேக ரயில் வலையமைப்புச் சட்டத்தின் (High-Speed Rail Network Act) கீழ், திட்டத்திற்குத் தேவையான காணிகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு முதன்மைக் கொள்வனவு உரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்த உரிமை எட்டு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடியதாகும். இதனால், காணிகளை விற்பனை செய்ய விரும்பும் உரிமையாளர்கள், அரசாங்கத்தின் முடிவு வரும் வரை நீண்டகால நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்ள நேரிடலாம் எனச் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய திருத்தங்களின்படி, ரயில் திட்டத்துடன் ‘தொடர்புடைய’ காணிகளையும் இந்த அதிகாரங்களின் கீழ் உள்ளடக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனினும், திட்டத்துடன் தொடர்புடைய காணிகள் என எவற்றைக் குறிப்பிடுகின்றனர் என்பது தெளிவாக வரையறுக்கப்படவில்லை என Aird & Berlis LLP சட்ட நிறுவனத்தின் நகராட்சி மற்றும் காணி கையகப்படுத்தல் விவகாரங்களுக்கான சட்ட நிபுணர் அஜய் கஜாரியா தெரிவித்துள்ளார்.

மேலும், தனியார் காணிகளில் மாற்றங்கள் அல்லது அபிவிருத்திப் பணிகளை நான்கு ஆண்டுகள் வரை தடைசெய்யும் அரசாங்கத்தின் அதிகாரங்களும் விரிவுபடுத்தப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணி உரிமையாளர்களுக்கு ஏற்படக்கூடிய நிதிச் சுமை

ரயில் பாதைகளைக் கடந்து செல்லும் வழித்தடங்கள் அமைப்பது தொடர்பான முரண்பாடுகளை வழக்கமான தீர்ப்பாயங்களுக்குப் பதிலாக நடுவர் தீர்ப்புக்கு (Arbitration) அனுப்பவும் புதிய முன்மொழிவு வழிவகுக்கிறது.

இதற்கான செலவு 50,000 டொலருக்குக் குறைவாக இருந்தால், இரு தரப்பினரும் அதனைச் சமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

இதன்படி, தமது காணிகளுக்குச் செல்வதற்கான ரயில் கடவுப் பாதையைப் பெறுவதற்காகப் போராடும் காணி உரிமையாளர் ஒருவர், அதிகபட்சமாக 25,000 டொலர் வரை செலவிட நேரிடலாம் எனச் சட்ட நிபுணர் தெரிவித்துள்ளார்.

நியாயமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்

கனடாவின் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு நிறுவனப் பணிப்பாளர் பேராசிரியர் மாட்டி சீமியாட்டிக்கி (Matti Siemiatycki), தனியார் சொத்துக்களைக் கையகப்படுத்துவது அரசாங்கம் மேற்கொள்ளும் மிக முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் காணிகளைக் கையகப்படுத்தினாலும், பாதிக்கப்படும் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், முதன்மைக் கொள்வனவு உரிமை மற்றும் காணிகளில் மாற்றங்களைச் செய்வதற்கான தடைகள் காரணமாக ஏற்படும் இழப்புகளுக்கும் இழப்பீடு வழங்கப்படுமா என்பது குறித்து அரசாங்கமும் ALTO நிறுவனமும் தெளிவான விளக்கமளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த ALTO நிறுவனத்தின் பேச்சாளர் மார்லீ சொக்கெட், ஒவ்வொரு காணி மற்றும் விவசாய நடவடிக்கைகளின் தன்மைக்கு ஏற்ப நியாயமான இழப்பீடு மதிப்பிடப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 2029–2030ஆம் ஆண்டுகளில் கட்டுமானப் பணிகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளைப் பொறுப்புடன் முன்னெடுக்கவே இந்தப் புதிய ஏற்பாடுகள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை!

இதற்கிடையில், சாஃபீஸ் லொக்ஸ் கிராமத்தில் வசிக்கும் எமானுவேல் ஃபுல்டாவர், தனது 88 வயதான தாயாரின் வீடு உட்படப் பல வீடுகள் இந்தத் திட்டத்தினால் பாதிக்கப்படக்கூடும் எனக் கவலை தெரிவித்துள்ளார்.

தனது தாயாரின் வீடு, எதிர்காலத்தில் முதியோர் பராமரிப்பு இல்லத்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கான நிதி ஆதாரமாக அமைய வேண்டும் எனத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும், அரசாங்கத்தின் முதன்மைக் கொள்வனவு உரிமை காரணமாக அந்தச் சொத்தின் எதிர்காலம் பாதிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மல்டிபிள் ஸ்க்ளீரோசிஸ் (Multiple Sclerosis) நோயுடன் வாழ்ந்து வரும் ஃபுல்டாவரும், சக்கர நாற்காலியைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டாலும் வீட்டின் கீழ் மாடியில் வசிக்கக்கூடிய வகையில் தனது வீட்டை மாற்றியமைத்துள்ளார்.

குளிரான காலநிலையில் போராட்டத்தில் ஈடுபடுவது உடல்ரீதியாகச் சிரமமாக இருந்தாலும், ஒவ்வொரு சனிக்கிழமையும் இரண்டு மணிநேரம் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனிநபராக ALTO நிறுவனத்தின் திட்டங்களுக்கு எதிராகத் தடையாக இருக்க முடியும் என்றும், மேலும் பலர் இணைந்தால் வலுவான எதிர்ப்பை உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் அதிவேக ரயில் திட்டம் தொடர்பான இந்த விவகாரம், காணி உரிமையாளர்களின் உரிமைகள், அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நியாயமான இழப்பீடு வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்த விவாதங்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments