Wednesday, November 25, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ஐ.பி.எல். ஏலத்தில் ஏழு இலங்கை வீரர்கள்

ஐ.பி.எல். ஏலத்தில் ஏழு இலங்கை வீரர்கள்

2027ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) வீரர்கள் ஏலத்தில் ஏழு இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன மற்றும் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க ஆகியோர் அதிகபட்ச அடிப்படை விலையான 2 கோடி இந்திய ரூபா பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.

2 கோடி இந்திய ரூபா அடிப்படை விலையில் மொத்தம் 30 வீரர்கள் பதிவு செய்துள்ள நிலையில், இதில் இரண்டு இந்தியர்களும் 28 வெளிநாட்டு வீரர்களும் அடங்கியுள்ளனர். ஏனைய ஐந்து இலங்கை வீரர்களான சரித் அசலங்க, துஷ்மந்த சமீர, குசல் மெண்டிஸ், மஹீஷ் தீக்ஷன மற்றும் சொனால் தினுஷ ஆகியோர் 1 கோடி இந்திய ரூபா அடிப்படை விலை பிரிவில் பதிவு செய்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை மாலை அணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆரம்பக் கட்டப் பட்டியலில் 939 இந்திய வீரர்கள் மற்றும் 281 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 1,220 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இறுதி ஏலத்திற்கு முன்னதாக இப்பட்டியல் மேலும் சுருக்கப்படவுள்ளது. டிசம்பர் 16ஆம் திகதி கோவாவில் நடைபெறவுள்ள மினி ஏலத்தில், 2 கோடி இந்திய ரூபா அடிப்படை விலையில் இங்கிலாந்தின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸும் இணைந்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஸ்டோக்ஸ், முன்னதாக ஐ.பி.எல். தொடரில் 45 போட்டிகளில் விளையாடி 935 ஓட்டங்களையும் 28 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
Daily Mirror – Sri Lanka

இதற்கிடையில், 12 பங்களாதேஷ் வீரர்கள் ஏலத்திற்குப் பதிவு செய்துள்ள போதிலும், முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் ஆரம்பப் பட்டியலில் இடம்பெறவில்லை. ஹசன் மஹ்மூத், தஸ்கின் அஹமட், தௌஹித் ஹிரிடோய் உள்ளிட்டோரே அப்பட்டியலில் உள்ளனர்.

கடந்த ஆண்டு இந்தியா – பங்களாதேஷ் இடையிலான இராஜதந்திர பதற்றங்களுக்கு மத்தியில், முஸ்தபிசுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்த சர்ச்சைக்குப் பின்னர் பங்களாதேஷ் வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கின்றனர்.

ஆரம்பப் பட்டியலிலுள்ள 1,220 வீரர்களில் 184 தேசிய அணியில் இடம்பிடித்த இந்திய வீரர்கள், 170 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 42 இணைப்பு நாடுகளின் வீரர்கள் உள்ளனர். மேலும், 127 உள்ளூர் இந்திய வீரர்கள், 628 ஏனைய உள்ளூர் இந்திய வீரர்கள் மற்றும் 69 வெளிநாட்டு உள்ளூர் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

பட்டியலில் இல்லாத மேலதிக வீரர்களைச் சேர்க்குமாறு நவம்பர் 27ஆம் திகதி மாலை 5.00 மணிக்குள் அணிகள் கோரிக்கை விடுக்கவும், இறுதிப் பெயர்களை டிசம்பர் 1ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்கவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவுறுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments