தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களையும் நகைச்சுவையையும் இணைத்து திரைப்படங்களை உருவாக்குவதில் தனித்துவம் பெற்ற இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘நவோரியா’.
‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’, ‘அறை எண் 305-ல் கடவுள்’, ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் சிம்புதேவன்.
மேலும், விஜய் நடித்த ‘புலி’, ‘கசட தபற’, ‘போட்’ ஆகிய திரைப்படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘நவோரியா’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளதுடன், முக்கியக் கதாபாத்திரங்களின் அறிமுகப் போஸ்டர்களும் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் விமல் ‘ஆதி’ என்ற கதாபாத்திரத்திலும், அன்ஷீத்தல் ‘அபி’ என்ற கதாபாத்திரத்திலும், ஆரி அர்ஜுனன் ‘கவுதம் ராஜேந்திரன்’ என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இவர்களுடன் தம்பி ராமையா, வடிவுக்கரசி, பால சரவணன், நிழல்கள் ரவி, பாலாஜி சக்திவேல், மன்சூர் அலிகான், கஸ்தூரி மற்றும் அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளதுடன், எம். சுகுமார் ஒளிப்பதிவையும், ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சிம்புதேவனின் வித்தியாசமான படைப்பாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், விமல் மற்றும் ஆரி அர்ஜுனன் கூட்டணியில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


