கியூபெக் மாகாணத்தில் உள்ள மின்சார விநியோக நிறுவனமான ‘ஹைட்ரோ-கியூபெக்’ (Hydro-Québec) தனது வாடிக்கையாளர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோரைத் தங்களது கடவுச்சொற்களைப் (passwords) புதுப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த அக்டோபர் 20 ஆம் தேதியன்று நிறுவனத்தின் வாடிக்கையாளர் தளத்தில் (Customer Space) சந்தேகத்திற்கிடமான முறையில் ஊடுருவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தச் சம்பவத்தின் போது நிறுவனத்தின் உட்புற அமைப்புகளோ அல்லது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகளோ எவ்விதத்திலும் சமரசம் செய்யப்படவில்லை என ஹைட்ரோ-கியூபெக் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் லூயிஸ்-ஆலிவர் பேட்டி (Louis-Olivier Batty) கூறுகையில், மர்ம நபர்கள் வேறு சில இணையதளங்களில் கசியவிடப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளையும் கடவுச்சொற்களையும் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் கணக்குகளை அணுக முயற்சித்ததாகத் தெரிவித்தார்.
வங்கி கணக்கு எண்கள் அல்லது சமூகப் பாதுகாப்பு எண்கள் போன்ற முக்கியத் தரவுகள் எவையும் திருடப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, ‘ஹைட்ரோ-கியூபெக்’ வாடிக்கையாளர் கணக்குகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில், 2023 ஆம் ஆண்டுக்கு முன்னர் கணக்குகளைத் தொடங்கிய பயனர்கள் தங்கள் கடவுச்சொற்களைப் புதிய பாதுகாப்புத் தரங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், கடந்த 5 ஆம் திகதி முதல் அனைத்து ‘ஹைட்ரோ-கியூபெக்’ வாடிக்கையாளர்களுக்கும் பன்முக அங்கீகார முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் உள்நுழையும் போது அவர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும் பாதுகாப்பு குறியீடு (security code) அவசியமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


