கனேடியப் பிரதமர் மார்க் கார்னியின் வங்கி விபரங்களை அனுமதியின்றிப் பார்வையிட்டதுடன், போலி வங்கிக் கணக்குகளையும் ஆரம்பித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட முன்னாள் வங்கி ஊழியருக்குச் சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும் என அரச தரப்பு சட்டத்தரணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஒட்டாவாவில் உள்ள ‘ரோயல் பேங்க் ஒஃப் கனடா’ கிளையொன்றில் பணியாற்றிய இப்ராஹிம் எல்-ஹக்கீம் என்பவர், 5,000 டொலர்களுக்கு மேற்பட்ட நிதி மோசடி, கணினியை அனுமதியின்றிப் பயன்படுத்தியமை மற்றும் ஆள்மாறாட்டம் ஆகிய குற்றச்சாட்டுகளைக் கடந்த ஓகஸ்ட் மாதம் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டிருந்தார்.
அவருக்கு எதிரான தண்டனை விதிப்பு விசாரணை ஒன்ராறியோ நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
எனினும், குறித்த விசாரணையின் போது எல்-ஹக்கீம் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததுடன், அவர் தற்போது எங்கிருக்கிறார் என்ற விபரம் தெரியவில்லை என நீதிபதி நார்ம் பொக்சால் தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கில் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மைகளின் அறிக்கையின்படி, “திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்” எனத் தான் நம்பிய நபரொருவராலேயே எல்-ஹக்கீம் இச்செயலுக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், 2023 நவம்பர் முதல் 2025 ஜூன் வரையான காலப்பகுதியில் குறித்த வங்கியில் அவர் குறைந்தது 43 போலி வங்கிக் கணக்குகளை ஆரம்பித்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


