சீனாவுடனான கனடாவின் வர்த்தக உறவுகள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு ஒரு முக்கியப் பிரச்சினையாக இல்லை என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஷென்சென் நகரில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோதே பிரதமர் மார்க் கார்னி இதனைக் குறிப்பிட்டார்.
சீனாவுடன் கனடா நெருக்கமான பொருளாதார உறவுகளைப் பேணுவது குறித்து வெள்ளை மாளிகை தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்துள்ள போதிலும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் தற்போதைய முன்னுரிமைப் பட்டியலில் சீனாவுடனான கனடாவின் வர்த்தகம் முதலிடத்தில் இல்லை என கார்னி சுட்டிக்காட்டினார்.
கனடாவின் நிலைப்பாடு குறித்தும், எதிர்கால உறவுகள் எங்கு செல்கின்றன என்பது குறித்தும் டிரம்ப் தெரிந்துகொள்ள முற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பரந்த மற்றும் சிக்கலான வர்த்தக உறவுக்கும், கனடாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுக்கும் பாரிய வித்தியாசம் உண்டு என பிரதமர் கார்னி விளக்கமளித்தார்.
கனடா தனது அதிநவீன செமிக்கண்டக்டர் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்யாமல், மாறாக கனோலா (canola), பன்றி இறைச்சி (pork), கடல் உணவு, திரவ இயற்கை எரிவாயு (LNG) மற்றும் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே சீனாவுக்கு ஏற்றுமதி செய்கிறது என அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவுடன் இடம்பெற்று வரும் இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதமர் கார்னி, பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
எவ்வாறாயினும், எட்டப்படும் எந்தவொரு ஒப்பந்தமும் கனேடியர்களின் நலன்களைப் பாதுகாப்பதாகவே அமையும் எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
முன்னதாக, சீன அதிபர் சி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மார்க் கார்னி, சுமார் 400 மில்லியன் டாலர் மதிப்பிலான கனேடிய ஏற்றுமதிகளுக்கு சீனா வர்த்தக வரி விலக்கு அளிக்கும் புதிய ஒப்பந்தமொன்றை சீனாவுடன் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


