இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா, முதலாவது BIMSTEC சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று (11) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அவரது இந்த விஜயம் பிராந்திய சுகாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், பொது சுகாதாரத் துறையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.
கொழும்பை வந்தடைந்த இந்திய சுகாதார அமைச்சரை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வரவேற்றுள்ளார்.
கொழும்பில் நடைபெறும் முதலாவது BIMSTEC சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில், உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பிராந்திய சுகாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் பொதுவான சுகாதார சவால்களுக்குத் தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர்.
வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான BIMSTEC அமைப்பின் கீழ், பொது சுகாதார ஒத்துழைப்புக்கான முன்னணி நாடாக இலங்கை இந்த மாநாட்டை நடத்துகின்றது.
100 புதிய அம்புலன்ஸ்கள் வழங்க இந்தியா நிதியுதவி!
இதேவேளை, இலங்கையின் 1990 சுவசெரிய இலவச அவசர அம்புலன்ஸ் சேவைக்காக, முழுமையான மருத்துவ உபகரணங்களுடன் கூடிய 100 புதிய அம்புலன்ஸ்களை கொள்வனவு செய்வதற்கான நிதியுதவி ஒப்பந்தத்திலும் இந்திய சுகாதார அமைச்சர் கைச்சாத்திடவுள்ளார்.
இந்திய சுகாதார அமைச்சருடனான கலந்துரையாடலின்போது குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (10) அறிவித்திருந்தார்.
இதற்காக இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொண்டு நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது 322 அம்புலன்ஸ்களுடன் இயங்கி வரும் சுவசெரிய சேவையில், தொடர்ச்சியான பயன்பாடு காரணமாக வாகனங்களில் இயந்திரக் கோளாறுகள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், புதிதாக வழங்கப்படவுள்ள 100 அம்புலன்ஸ்கள் சுவசெரிய சேவையின் செயற்பாட்டுத் திறனை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


