கனடாவைச் சேர்ந்த குற்றவாளி ஒருவரின் பங்காளரைப் பிணையில் விடுவிப்பதற்காக 2 மில்லியன் டொலர் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் மெக்சிகோ நீதிபதி ஒருவர் கொலம்பியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க நீதித்துறையின் தகவல்படி, மெக்சிகோ நகரத்தைச் சேர்ந்தவரும் 49 வயதுடையவருமான நீதிபதி லூயிஸ் பெனிடெஸ் அல்காண்டரா (Luis Benitez Alcantara) கொலம்பியாவில் கைது செய்யப்பட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் முன்னாள் ஒலிம்பிக் பனிச்சறுக்கு வீரரும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனுமாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் ரயன் வெட்டிங்கின் (Ryan Wedding) முக்கிய கூட்டாளியைப் பிணையில் விடுவிப்பதற்காகவே அவர் இந்த லஞ்சத்தைப் பெற்றுள்ளார்.
சர்வதேச அளவில் இயங்கும் ஒரு பெரிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் முக்கிய பங்காற்றியதாகக் கூறப்படும் 36 வயது கானியக் குடிமகனான ஆண்ட்ரூ கிளார்க் (Andrew Clark) என்பவரை விடுவிப்பதற்காக, அந்த நீதிபதி தனது உத்தியோகபூர்வ அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து இந்த லஞ்சத்தைப் பெற்றதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கனேடியரான குற்றவாளி ரயன் வெட்டிங் தலைமையிலான இந்த சமூக விரோதக் கும்பலில், ஆண்ட்ரூ கிளார்க் இரண்டாவது முக்கிய நபராகக் கருதப்படுகிறார்.
கைது செய்யப்பட்டுள்ள நீதிபதி லூயிஸ் பெனிடெஸ் அல்காண்டரா மீது குற்றத்திற்கு உடந்தையாகச் செயல்பட்டதாகக் கூறி ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவரை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கான கோரிக்கைகள் விடுக்கப்படும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இந்த வழக்கில் தொடர்புடையவரும் பிரதான சந்தேக நபருமான கனேடியருமான ரயன் வெட்டிங், கடந்த ஜனவரி மாதம் மெக்சிகோவில் வைத்து கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
போதைப்பொருள் கடத்தல், கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல தீவிர குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள அவர், தற்போது அமெரிக்க மத்தியக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் அவருக்கான இரண்டு வழக்கு விசாரணைகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


