Sunday, November 8, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு – தொடர்புடைய பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு!

கனடாவில் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு – தொடர்புடைய பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு!

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில், அதிவேகமாகப் பயணித்த பொலிஸ் வாகனம் மோதி 25 வயதுடைய இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறித்து, உயிரிழந்த இளைஞரின் தாயார் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

குறித்த விபத்து இடம்பெற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தனது மகனின் உயிரிழப்புக்குக் காரணமான விபத்தில் தொடர்புடைய அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டமை புரியாத புதிராக இருப்பதாக கோரீனா ஜோன்ஸ் (Coreena Jones) தெரிவித்துள்ளார்.

மிட்லாண்ட் பகுதியைச் சேர்ந்த திறமையான லாக்ரோஸ் (Lacrosse) விளையாட்டு வீரரான நோவா லான்ட்ரியோல்ட் (Noah Landriault) என்பவர், 2024 செப்டெம்பர் 29ஆம் திகதி அதிகாலை 6 மணியளவில், ஒன்ராறியோவின் பாலா (Bala) பகுதியில் உள்ள முஸ்கோகா வீதி 169இல் நடந்து சென்றுகொண்டிருந்தபோது பொலிஸ் வாகனம் மோதி உயிரிழந்தார்.

சம்பவத்தின்போது, அடையாளம் காட்டப்படாத ஜீப் ரக ஒன்ராறியோ மாகாண பொலிஸ் வாகனத்தை அப்போதைய துப்பறியும் கான்ஸ்டபிள் ரெபெக்கா லிண்ட்சே (Rebecca Lindsay) செலுத்தியுள்ளார்.

ஒன்ராறியோவின் விசேட விசாரணைப் பிரிவு (SIU) மேற்கொண்ட விசாரணையில், 50 கிலோமீற்றர் வேக வரம்பைக் கொண்ட சமூகப் பாதுகாப்பு வலயத்தில் குறித்த வாகனம் மணிக்கு சுமார் 25 கிலோமீற்றர் மேலதிக வேகத்தில் பயணித்தமை கண்டறியப்பட்டது.

எனினும், இந்தச் சம்பவத்தில் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கான அடிப்படை ஆதாரங்கள் இல்லை என விசாரணைப் பிரிவு தீர்மானித்தது.

இதனைத் தொடர்ந்து, கோரீனா ஜோன்ஸ் சட்ட அமலாக்கப் புகார்கள் முகவரகத்திடம் (LECA) முறைப்பாடு செய்துள்ளார்.

அதன் விசாரணையில், வேக வரம்பை மீறி வாகனத்தைச் செலுத்தியதன் மூலம் பொலிஸ் அதிகாரி முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டது. வாகனத்தைச் செலுத்திய விதம் ஊழியர்களின் பாதுகாப்பையும் பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இதற்காக குறித்த அதிகாரிக்கு 40 மணித்தியால சம்பள இழப்பு தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 2,370 கனேடிய டொலர்களுக்கு இணையானதாகும்.

ஆனால், விபத்துக்குப் பின்னர் குறித்த அதிகாரி துப்பறியும் கான்ஸ்டபிள் பதவியிலிருந்து துப்பறியும் சார்ஜன்ட் (Detective Sergeant) பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.

இந்தப் பதவி உயர்வின் மூலம் ஆண்டுக்கு சுமார் 6,300 கனேடிய டொலர்கள் மேலதிக சம்பள உயர்வு கிடைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தாயார், தனது மகனின் இழப்பால் குடும்பத்தினரும் நண்பர்களும் வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டமை தமக்கு மீண்டும் ஒரு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், சம்பவம் தொடர்பில் இரங்கல் தெரிவித்துள்ள ஒன்ராறியோ மாகாண பொலிஸார், சட்ட விதிகளுக்கு அமைவாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த அதிகாரி குற்றவியல் தவறுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனினும், பதவி உயர்வு தொடர்பான கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காத பொலிஸ் பேச்சாளர், பதவி உயர்வுக்கான போட்டிகளில் அதிகாரிகளின் ஒழுக்காற்றுப் பதிவுகளும் உள்ளக மதிப்பீட்டின் ஒரு பகுதியாகக் கருத்தில் கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments