டிஜிட்டல் வங்கி அமைப்பான ‘ueno’வின் சரிவு மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான வழக்கில், பராகுவே நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சாண்டியாகோ பென்யாவுக்கு (Santiago Peña) காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் சுய லாபத்திற்காக நிர்வாகம் செய்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் பாராளுமன்றத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அடுத்த நாளே, சனிக்கிழமை அன்று முன்னாள் ஜனாதிபதி பென்யா கைது செய்யப்பட்டார்.
வழக்கு விசாரணை முடிவடையும் வரை அவர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க ராணுவப் படை முகாமில் காவலில் வைக்குமாறு நீதிபதி ஹம்பர்ட்டோ ஒடாசு (Humberto Otazú) உத்தரவிட்டுள்ளார்.
‘ueno’ என்ற டிஜிட்டல் வங்கியின் சரிவு காரணமாக மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் தங்களது கணக்குகளைப் பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வரும் நிலையில்,நாட்டின் தலைநகர் அசுன்சியோனில் (Asuncion) மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி பென்யா 2025 மார்ச் மாதம் வரை இந்த வங்கியின் தாய் நிறுவனத்தில் பங்குகளைக் கொண்டிருந்தார்.
தனது பதவியைப் பயன்படுத்தி அரசு அமைப்புகளின் நிதியை இந்த வங்கியில் வைப்பு வைக்கச் செய்ததன் மூலம் சுய லாபம் அடைந்ததாக சட்டத்தரணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இக்குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
இவ்வழக்கில் பராகுவே மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் கார்லோஸ் கர்வாலோவும் (Carlos Carvallo) கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் 2023 வரை இந்த டிஜிட்டல் வங்கியின் தலைவராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணி ரிகார்டோ பிரேடா இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நிலையில், பென்யாவின் பதவி பறிப்பைத் தொடர்ந்து துணை ஜனாதிபதியாக இருந்த பெட்ரோ அலியானா (Pedro Alliana) புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். அவர் பென்யாவின் எஞ்சிய பதவிக் காலமான 2028 ஆகஸ்ட் மாதம் வரை ஜனாதிபதியாக தொடர்வார்.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அரசு வைப்புத்தொகை உத்தரவாதத் திட்டத்தின் கீழ் இதுவரை 160 மில்லியன் டொலர் தொகையை மத்திய வங்கி வழங்கியுள்ளது.


