Saturday, October 31, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் இந்த வார இறுதியில் நேர மாற்றம்

கனடாவில் இந்த வார இறுதியில் நேர மாற்றம்

கனடாவின் பல பகுதிகளில் இந்த வார இறுதியில் மீண்டும் கடிகார நேரம் ஒரு மணிநேரம் பின்னோக்கி மாற்றப்படவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு, சில மாகாணங்களில் கடிகாரங்கள் ஒரு மணிநேரம் பின்னோக்கி மாற்றப்பட்டு, நிலையான நேரம் (Standard Time) நடைமுறைக்கு வரவுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த மாற்றத்தின் மூலம், மக்கள் ஒரு மணிநேரத்தை மேலதிகமாகப் பெற்றுக்கொள்கின்றனர்.

இதற்கு மாறாக, கோடைகால நேரம் (Daylight Saving Time) மார்ச் மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகும். அப்போது கடிகாரங்கள் ஒரு மணிநேரம் முன்னோக்கி மாற்றப்படுவதுடன், கோடைகாலத்தில் கிடைக்கும் நீண்ட பகல் பொழுதை மக்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

நிரந்தர கோடைகால நேரத்திற்கு மாறும் பகுதிகள்

இந்த வார இறுதியில் ஒன்ராறியோ மாகாணத்தின் வடமேற்குப் பகுதிகளில் சில, நிரந்தர கோடைகால நேர முறைக்கு மாறவுள்ளன. இதன் மூலம் அப்பகுதிகள் மனிடோபா மாகாணத்துடன் ஒரே நேரத்தைப் பின்பற்ற முடியும்.

மேலும், வடமேற்குப் பிரதேசங்கள் (Northwest Territories), பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பேர்ட்டா மற்றும் மனிடோபா ஆகிய பகுதிகளும் இந்த ஆண்டு நிரந்தர கோடைகால நேர நடைமுறையை அறிவித்துள்ளன.

பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கத்தின் கூற்றுப்படி, இந்த மாற்றம் மக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், குடும்பங்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஏற்படும் இடையூறுகளைக் குறைக்கவும், நேர அட்டவணைகளை எளிமைப்படுத்தவும் உதவும்.

குறிப்பாக, குளிர்கால மாலைப் பொழுதுகளில் மேலதிக ஒரு மணிநேர வெளிச்சத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரத்தைப் பின்னோக்கி மாற்றும் பகுதிகள்

அட்லாண்டிக் கனடா, கியூபெக் மாகாணத்தின் சில பகுதிகள், லாப்ரடோர், ஒன்ராறியோவின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் நுனாவுட்டின் பெரும்பாலான பகுதிகள் வழக்கம்போல் நிலையான நேரத்திற்கு மாறவுள்ளன.

இதற்கிடையில், பகலொளி சேமிப்பு நேர முறையை முடிவுக்குக் கொண்டுவருவதாக கியூபெக்கின் பார்ட்டி கியூபெக்குவா (Parti Québécois) கட்சி வியாழக்கிழமை உறுதியளித்துள்ளது.

இந்த நடைமுறை ஆரோக்கியத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், குழந்தைகள் புதிய நேரத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வதிலும் சவால்களை உருவாக்குவதாக ஆய்வுகள் தெரிவிப்பதாக கியூபெக் முதல்வர் பால் செயின்ட்-பியர் பிளாமண்டன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சஸ்காட்சுவான் மற்றும் யூகோன் ஆகிய பகுதிகள் ஆண்டு முழுவதும் நிலையான நேரத்தையே பின்பற்றி வருகின்றன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments