அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தான் தீர்த்து வைத்த ஒவ்வொரு போருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
வொஷிங்டனில் இன்று (10) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், தனக்கு நோபல் பரிசு வழங்கப்படாதது நோர்வேக்கும் நோபல் பரிசுக் குழுவுக்கும் அழியாத கறை எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றும், இதுவரை பலரும் அறிந்திராத ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நபரைப் பற்றி தானும் இதுவரை கேள்விப்பட்டதில்லை என்றும் அவர் தெரிவித்தார். அதேவேளை, பரிசு பெற்றவருக்கு வாழ்த்துகளையும் கூறினார்.
இந்தியா – பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இடையிலான போர்களைத் தாம் முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும், அதற்காகத் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
“நான் தீர்த்து வைத்த ஒவ்வொரு போருக்கும் அமைதிக்கான நோபல் பரிசை எட்டு முறை பெற்றிருக்க வேண்டும். ஆனால், அந்தப் பரிசை நோர்வே எனக்கு வழங்கவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.


