அரச சேவையின் டிஜிட்டல் மயமாக்கலை வலுப்படுத்தி, அதனை விரைவுபடுத்தும் நோக்கில் அரச துறை ஊழியர்களுக்கு உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் அரச நிறுவனங்களுக்கு இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்தவும், தகவல் மற்றும் தரவுகளை திறம்பட பரிமாறிக்கொள்ளவும் முடியும் என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போது பல அரச ஊழியர்கள் உத்தியோகபூர்வ பணிகளுக்காக தாங்களாக உருவாக்கிய தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உத்தியோகபூர்வ அரச மின்னஞ்சல் முகவரிகள் மூலம் ஆவணங்கள் மற்றும் முக்கியமான தகவல்களை பாதுகாப்பான முறையில் பரிமாறிக்கொள்ள முடியும் எனவும், காணொளி மாநாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் இலகுவாக முன்னெடுக்க முடியும் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சியின் மூலம் அரச நிறுவனங்களுக்கு இடையிலான தொடர்புகள் மேம்படுத்தப்பட்டு, அரசாங்கத்தின் பரந்த டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்துக்கு ஆதரவளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மின்னஞ்சல் ஊடாக உத்தியோகபூர்வ தொடர்பாடல்களை மேற்கொள்ளும் அனைத்து அரச அதிகாரிகளுக்கும் இந்த உத்தியோகபூர்வ மின்னஞ்சல் வசதி வழங்கப்படவுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


