ஆசிய மகளிர் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 114 ஓட்டங்களைப் பெற்றது. சோபனா மொஸ்டாரி 34 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். இலங்கை சார்பில் சமூதி பிரபோதா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
115 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.
இலங்கை அணியின் வெற்றியில் ஹர்சிதா சமரவிக்ரம முக்கிய பங்காற்றினார். அவர் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி குழுநிலையில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆசிய மகளிர் கிண்ண அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.


