Sunday, July 19, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம்: 10 பேரிடம் வாக்குமூலம் பதிவு!

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம்: 10 பேரிடம் வாக்குமூலம் பதிவு!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் தொடர்பில் இதுவரை 10 பேருக்கும் அதிகமானோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

64 வயதான சி.டி. விக்கிரமரத்ன, நேற்று வெள்ளிக்கிழமை காலை மாலபே, தலாஹேன பகுதியில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.

தனது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கியைப் பரிசோதிப்பதாகக் கூறி, அதனைப் பெற்றுக்கொண்டு அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மரணம் தற்கொலையாகக் கருதப்படுவதால், பொலிஸ் ஒழுக்கக் கோவைக்கு அமைவாக அவருக்கு உத்தியோகபூர்வ பொலிஸ் மரியாதைகள் வழங்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் நடந்த வேளையில், இரு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மனைவி மற்றும் இளைய மகன் ஆகியோர் மாத்திரமே வீட்டில் இருந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய விசேட உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

இதற்கமைய, கொழும்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டலில், மேல் மாகாண தெற்கு விசேட விசாரணைப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன், நுகேகொட கோட்டத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில், மாலம்பே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் தனியான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

இதற்கிடையில், சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடல் நாளை ஞாயிற்றுக்கிழமை பொரளையிலுள்ள தனியார் மலர்சாலையொன்றில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அவரது இறுதிச் சடங்குகள் நாளைமறுதினம் திங்கட்கிழமை பிற்பகல் பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளது என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments