கொழும்பில் இருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பயணிகள் பேருந்து வெல்லம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, வீதியை விட்டு விலகி வெல்லம்பிட்டி பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது:-
கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை 5.30 மணியளவில் அம்பாறை நோக்கிப் புறப்பட்ட இந்தப் பயணிகள் பேருந்து வெல்லம்பிட்டி, அம்பகஹ சந்திக்கு அருகில் சென்றுகொண்டிருந்த போதே இந்தத் விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தினால் பேருந்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பேருந்தின் சாரதி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்து இடம்பெற்ற வேளையில் பஸ்ஸினுள் சுமார் 50 இற்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துக் கொண்டிருந்த போதிலும், அவர்கள் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர் என்று வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


