Tuesday, March 10, 2026
spot_img
Homeபொது செய்திகள்நள்ளிரவில் விழிப்பு வருகிறதா? வெண்ணெய் தீர்வா அல்லது ஆபத்தா?

நள்ளிரவில் விழிப்பு வருகிறதா? வெண்ணெய் தீர்வா அல்லது ஆபத்தா?

செல்போன் திரையில் முடிவில்லாமல் ‘ஸ்க்ரோலிங்’ செய்வது, நள்ளிரவு வரை ஓயாத சிந்தனைகள் என இன்றைய காலகட்டத்தில் நிம்மதியான உறக்கம் என்பது பலருக்கும் எட்டாக்கனியாகிவிட்டது.

ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, சருமப் பராமரிப்பு என அனைத்திலும் கவனம் செலுத்தும் நாம், மிக முக்கியமான உறக்கத்தை மட்டும் கோட்டை விட்டுவிடுகிறோம்.

தூக்கம் வராமல் தவிக்கும் பலருக்கு, இணைய உலகம் ஒரு வினோதமான தீர்வைப் பரிந்துரைக்கிறது: “தூங்குவதற்கு முன் ஒரு ஸ்பூன் வெண்ணெய் சாப்பிடுங்கள்!”

வைரலாகும் ‘பட்டர்’ டிரெண்ட்: பின்னணி என்ன?

சமூக வலைதளங்களில் குறிப்பாக ‘பயோஹேக்கர்ஸ்’ (Biohackers) மற்றும் உடல்நலப் பதிவர்கள் மத்தியில் இந்த ‘வெண்ணெய் மேஜிக்’ பிரபலமாகி வருகிறது.

தூங்குவதற்கு முன் சிறிதளவு வெண்ணெய் உட்கொண்டால் இரவு முழுவதும் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும் என இவர்கள் வாதிடுகின்றனர்.

“இந்த டிரெண்ட் பெரும்பாலும் ‘கீட்டோ’ (Keto) மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் (Low-carb) உணவு முறையைப் பின்பற்றுபவர்களிடமிருந்து வந்துள்ளது,” என்கிறார் குருகிராம் ஆர்ட்டெமிஸ் மருத்துவமனையின் மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் அன்ஷுல் சிங்.

உறங்கும் போது இரத்த சர்க்கரை அளவு (Blood Sugar Level) சீராக இருக்கவும், பசியால் தூக்கம் கலைவதைத் தடுக்கவும் கொழுப்புச் சத்து உதவும் என்பது இவர்களின் நம்பிக்கை.

அறிவியல் என்ன சொல்கிறது?

இருப்பினும், தூக்க அறிவியலின் படி இதற்கு நேரடி ஆதாரங்கள் இல்லை என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஹைதராபாத் அரேட்டே மருத்துவமனையின் நுரையீரல் மற்றும் தூக்கக் கோளாறுகள் பிரிவின் தலைவர் டாக்டர் நளினி நகல்லா இது குறித்துக் கூறுகையில், “வெண்ணெய் மட்டுமே உறக்கத்தை மேம்படுத்தும் என்பதற்கு எந்தவொரு வலுவான அறிவியல் சான்றும் (Scientific Evidence) இல்லை.

மக்கள் எளிமையான தீர்வுகளைத் தேடுவதாலேயே இதுபோன்ற தகவல்கள் இணையத்தில் வேகமாகப் பரவுகின்றன,” என்கிறார்.

வெண்ணெய் எப்படி உறக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

பசியோடு தூங்கச் செல்வது நள்ளிரவில் விழிப்பை ஏற்படுத்தும்.

உடல் ஆற்றல் தேவையை உணரும்போது தூக்கம் கலைந்துவிடும்.

  • பசி கட்டுப்பாடு: வெண்ணெயில் உள்ள அதிகப்படியான கொழுப்புச் சத்து செரிமானத்தை மெதுவாக்குகிறது. இது வயிறு நிரம்பிய உணர்வை (Fullness) நீண்ட நேரம் வைத்திருப்பதால், நள்ளிரவில் பசியால் விழிப்பு வருவதைத் தடுக்கலாம்.

  • இரத்த சர்க்கரை நிலைத்தன்மை: பெங்களூரு கிளெனீகிள்ஸ் பிஜிஎஸ் மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் கார்த்திகை செல்வி கூறுகையில், “இரவில் இரத்த சர்க்கரை அளவு திடீரென குறைந்தால், உடல் ‘கார்டிசோல்’ (Cortisol) போன்ற அழுத்த ஹார்மோன்களை வெளியிடும். இது தூக்கத்தைக் கலைக்கும். வெண்ணெய் போன்ற கொழுப்பு உணவுகள் இந்தச் சரிவைத் தடுக்க ஓரளவுக்கு உதவலாம்,” என்கிறார்.

எல்லோருக்கும் இது செட் ஆகுமா? (எச்சரிக்கை!)

வெண்ணெய் ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவும் பியூட்ரிக் அமிலம் (Butyric acid) மற்றும் வைட்டமின்கள் (A, D, E, K) கொண்டிருந்தாலும், இது அனைவருக்கும் ஏற்றதல்ல.

  1. நெஞ்செரிச்சல் (Acid Reflux): தூங்குவதற்கு முன் அதிக கொழுப்புள்ள உணவை உண்பது அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சலை உண்டாக்கி உறக்கத்தை முழுமையாகக் கெடுக்கக்கூடும்.

  2. இதய ஆரோக்கியம்: அதிக கொலஸ்ட்ரால், இதய நோய், மற்றும் பித்தப்பை பிரச்சனைகள் உள்ளவர்கள் வெண்ணெயைத் தவிர்ப்பது அவசியம்.

  3. செரிமானப் பிரச்சனை: பால் ஒவ்வாமை (Lactose intolerance) உள்ளவர்களுக்கு இது அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

வெண்ணெய்க்கு மாற்றான சிறந்த உணவுகள்

வெண்ணெய் ஒன்றே தீர்வல்ல; அதைவிடச் சிறந்த, மென்மையான மாற்றுகள் பல உள்ளன:

  • ஊறவைத்த பாதாம் பருப்புகள்

  • நட் பட்டர் (Nut butter)

  • கிரீக் தயிர் (Greek yogurt)

  • வேகவைத்த முட்டை

  • ஒரு துண்டு சீஸ் அல்லது மிதமான சூட்டில் ஒரு டம்ளர் பால்.

மெக்னீசியம் (Magnesium) அல்லது ட்ரிப்டோபான் (Tryptophan) நிறைந்த உணவுகள் உடலைத் தளர்வடையச் செய்து இயல்பாகவே தூக்கத்தைத் தூண்டும்.

இறுதித் தீர்ப்பு

இரவில் வெண்ணெய் சாப்பிடுவது என்பது ஒரு மாயாஜால தூக்க மருந்து அல்ல.

உங்கள் உறக்கக் குறைபாட்டிற்குப் பின்னணியில் பசி அல்லது இரத்த சர்க்கரை ஏற்றத்தாழ்வு இருந்தால் மட்டுமே இது மறைமுகமாக உதவக்கூடும்.

இணையத்தில் வைரலாகும் நுணுக்கங்களைப் பின்பற்றுவதை விட, உங்கள் உடலின் தேவை என்ன என்பதைப் புரிந்துகொள்வதே நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுக்கும்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments