அவுஸ்திரேலியாவில் கார் மோதியதில் படுகாயமடைந்த சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹெய்ன்ஸின் ஒரு கால் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஹெலன் ஹெய்ன்ஸ் (வயது 65), விக்டோரியா மாநிலத் தலைநகர் மெல்பேர்னுக்கு வடகிழக்கே அமைந்துள்ள வங்கரட்டா (Wangaratta) நகரிலுள்ள தனது தொகுதி அலுவலகத்திற்கு வெளியே இருந்தபோது, வெள்ளை நிற டொயோட்டா ரக SUV வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார்.
குறிப்பாக, அவரது உடலின் கீழ்ப்பகுதியில் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இரவோடிரவாக அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அவரது ஒரு கால் அகற்றப்பட்டதாக அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமான ABC மற்றும் சிட்னி மார்னிங் ஹெரால்ட் ஆகிய ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டன.
சம்பவம் தொடர்பான விசாரணைகளில் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினரும் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், பலத்த சத்தமொன்றைக் கேட்டதாகவும், அதன் பின்னர் பெண்ணொருவர் இரண்டு வாகனங்களுக்கு இடையில் சிக்கியிருப்பதைக் கண்டதாகவும் ஏ.பி.சி ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் 43 வயதுடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, ஹெலன் ஹெய்ன்ஸ் தனது காரின் பின்புறத்தில் பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்தபோது, குறித்த சாரதி வாகனத்தைத் திருப்பி வந்து அவர் மீது மோதியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. “இது ஒரு விபத்து அல்ல. இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயலாகத் தெரிகிறது” எனப் பிரதமர் ஏ.பி.சி ஊடகத்திடம் கூறியுள்ளார்.
எனினும், தாக்குதலுக்கான நோக்கம் குறித்து முடிவுக்கு வருவதற்கு இன்னும் காலம் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹெலன் ஹெய்ன்ஸின் அலுவலகத்திற்கு அருகில் சிகையலங்கார நிலையம் நடத்திவரும் ரிக்கி ஜெஃப்ரீஸ், சம்பவத்தையடுத்து சாரதியை வாகனத்திலிருந்து வெளியே இழுத்து, பொலிஸார் வரும் வரை அவரைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளார். இதனால் அவர் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.
சாரதியின் வாகனத்தில் கத்தி ஒன்று இருந்ததாகவும், அவர் அதனை வெளியே எடுக்கவில்லை என்றாலும், அவரது அசைவுகள் தமக்கு அச்சத்தை ஏற்படுத்தியதால் அந்தக் கத்தியை அவரது பையிலிருந்து எடுத்து அப்புறப்படுத்தியதாகவும் ஜெஃப்ரீஸ் தெரிவித்துள்ளார். பின்னர் சாரதியைத் தரையில் கட்டுப்படுத்தி வைத்திருந்ததாகவும், அவர் இனி அச்சுறுத்தலாக இருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னர் பொலிஸார் வரும் வரை அங்கேயே இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் தாம் ஆற்றிய பங்கைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை எனத் தெரிவித்த அவர், “எனக்குக் காயம் ஏற்பட்டால் எனது மனைவி ஏமாற்றமடைவார் என்பதே முதலில் எனக்குத் தோன்றியது” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அங்கிருந்த ஏனையவர்களும் பெரும் உதவிகளைச் செய்ததாகவும், அவர்களே பாராட்டப்பட வேண்டியவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் அண்மைக்காலமாக அரசியல் வன்முறைகள் அதிகரித்து வருவதாகப் பிரதமர் அந்தோனி அல்பனீஸ் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து தற்போது ஊகிப்பது முன்கூட்டியதாக இருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், “அண்மைக் காலங்களில் பதற்றம் அதிகரித்துள்ளது. இது குறித்து ஊடகத் துறையினரிடமும் எனது கவலையை வெளிப்படுத்தியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
விக்டோரியா மாநில முதல்வர் பென் கரோலும் இந்தத் தாக்குதல் குறித்து அதிர்ச்சியும் கவலையும் வெளியிட்டுள்ளார். ஹெலன் ஹெய்ன்ஸ் பிரதிநிதித்துவப்படுத்தும் வங்கரட்டா சமூகத்தினருக்கும் அவரைச் சார்ந்த அனைவருக்கும் இந்தச் சம்பவம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹெய்ன்ஸ் முழுமையாகக் குணமடைய அனைவரும் பிரார்த்திப்பதாகவும் அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிலும் ஏனைய நாடுகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த அரச அதிகாரிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், துன்புறுத்தல்கள் அண்மைய ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், ஹெலன் ஹெய்ன்ஸ் மீதான சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா என்பது தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன.
2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகுவதற்கு முன்னர் ஹெலன் ஹெய்ன்ஸ் தாதியாகவும் மகப்பேற்று மருத்துவத் தாதியாகவும் பணியாற்றியுள்ளார். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான வலுவான நடவடிக்கைகளை வலியுறுத்தி வரும் அரசியல்வாதியாகவும் அவர் அறியப்படுகிறார்.


