ஆர்க்டிக் பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி அதிகாரமிக்க தீவான கிரீன்லாந்தை (Greenland) அமெரிக்காவுடன் இணைக்கப் போவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள அறிவிப்பு, உலக நாடுகளிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் ரஷ்யா தனது மௌனத்தைக் கலைத்துள்ளது.
வெள்ளிக்கிழமை (ஜனவரி 16, 2026) அன்று கிரெம்ளின் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “கிரீன்லாந்து என்பது டென்மார்க் நாட்டின் ஒரு பகுதி என்பதில் எந்த மாற்றமும் இல்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. கிரீன்லாந்தால் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்கா கூறுவது ஏற்க முடியாத ஒன்று எனச் சாடிய ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், மற்ற நாடுகளுக்கு நீதி போதிக்கும் மேற்கத்திய நாடுகள், தற்போது ஒரு நாட்டின் பகுதியை ஆக்கிரமிக்கத் துடிப்பது அவர்களின் “இரட்டை வேடத்தை” (Double Standards) அம்பலப்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.
கிரீன்லாந்தின் புவிசார் முக்கியத்துவம் மற்றும் அங்குள்ள அபரிமிதமான கனிம வளங்கள் காரணமாக, அதை அமெரிக்காவுடன் இணைப்பது அந்நாட்டின் பாதுகாப்புக்கு அவசியம் என அதிபர் ட்ரம்ப் கருதுகிறார். இதற்காக ராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் அவர் தயங்கப்போவதில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர், டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சனைச் சந்தித்து, காங்கிரஸின் ஆதரவு டென்மார்க்கிற்கு உண்டு என ஆறுதல் கூறி வருகின்றனர். “பதற்றமான இக்காலகட்டத்தில் நட்பு நாடுகளை நாம் அரவணைக்க வேண்டுமே தவிர, விரட்டக்கூடாது” என ஜனநாயகக் கட்சி செனட்டர் கிறிஸ் கூன்ஸ் தெரிவித்துள்ளார்.
மற்றொரு முக்கிய திருப்பமாக, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க விரும்புவதை மாஸ்கோ வரவேற்றுள்ளது. இதற்காக அதிபர் ட்ரம்பின் தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரை மாஸ்கோவிற்கு வரவேற்கத் தயாராக இருப்பதாக கிரெம்ளின் அறிவித்துள்ளது.


