வெனிசுலா நாட்டின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்படும் எதிர்க்கட்சித் தலைவி மரியா கொரினா மச்சாடோ, தனக்குக் கிடைத்த ‘நோபல் அமைதிப் பரிசை’ அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்குப் பரிசாக வழங்கி உலகையே அதிரவைத்துள்ளார். வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, வெனிசுலாவின் விடுதலைக்காக டிரம்ப் காட்டிய உறுதிப்பாட்டிற்கு நன்றியாக இந்தப் பதக்கத்தை அவர் வழங்கியுள்ளார்.
“இது எமது சுதந்திரத்திற்காக டிரம்ப் செய்த அர்ப்பணிப்பிற்கான கௌரவம்” என மச்சாடோ நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மச்சாடோவின் இந்தப் பரிசைப் பெற்றுக்கொண்ட டிரம்ப், அவரை “அற்புதமான பெண்” எனப் பாராட்டியதுடன், இது ஒரு மிகச்சிறந்த பரஸ்பர மரியாதை எனத் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இருப்பினும், ஒருவருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை இன்னொருவருக்கு அன்பளிப்பாக வழங்க முடியாது என நோபல் நிறுவனம் இந்தச் செயலுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.
வெனிசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர், அடுத்ததாக நாட்டை வழிநடத்த மச்சாடோவுக்குத் தகுதி இருக்கிறதா என டிரம்ப் முன்னதாகச் சந்தேகம் எழுப்பியிருந்தார். டிரம்ப் தற்போது இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸுடன் நெருக்கம் காட்டி வரும் நிலையில், டிரம்பின் முழுமையான ஆதரவைப் பெறுவதற்காகவே மச்சாடோ இத்தகைய ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றன.
இந்தச் சந்திப்பின் போது வெனிசுலாவில் தேர்தல் எப்போது நடக்கும் என்பது குறித்து டிரம்ப் எந்தவொரு உறுதிமொழியையும் வழங்கவில்லை. மச்சாடோவிடம் தற்போது போதிய மக்கள் ஆதரவு இல்லை என வெள்ளை மாளிகை தரப்பு கருதுவதால், இந்த நோபல் பரிசுப் பரிமாற்றம் வெறும் அடையாளப்பூர்வமான ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது.


