Sunday, June 7, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்பங்களாதேஷ் கிரிக்கெட் அதிரடி: வீரர்கள் போட்டிகளை புறக்கணிப்பு!

பங்களாதேஷ் கிரிக்கெட் அதிரடி: வீரர்கள் போட்டிகளை புறக்கணிப்பு!

பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் (BCB) இயக்குநர் நஜ்முல் இஸ்லாம் உடனடியாகப் பதவி விலகக் கோரி, அந்த நாட்டு கிரிக்கெட் வீரர்கள் இன்று முதல் அனைத்துப் போட்டிகளையும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். வீரர்களின் ஊதியம் குறித்து அவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தைத் தொடர்ந்து, டாக்காவில் நேற்று நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வீரர்கள் நலச் சங்கத்தின் தலைவர் முகமது மிதுன் விடுத்துள்ள காலக்கெடுவின்படி, இன்று மதியம் 1:00 மணிக்குள் நஜ்முல் இஸ்லாம் ராஜினாமா செய்யாவிட்டால், தற்போது நடைபெற்று வரும் பி.பி.எல் (BPL) தொடர் உள்ளிட்ட அனைத்துக் கிரிக்கெட் நடவடிக்கைகளும் முடக்கப்படும். “வீரர்கள் மோசமாக விளையாடினால் வாங்கிய சம்பளத்தைத் திருப்பித் தரவேண்டும்” என நஜ்முல் இஸ்லாம் பேசியது ஒட்டுமொத்த கிரிக்கெட் வீரர்களையும் அவமதிக்கும் செயல் என வீரர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

சர்வதேசப் போட்டிகளில் பங்களாதேஷ் அணியின் ஆட்டம் மற்றும் வீரர்களுக்கான இழப்பீடு குறித்து நஜ்முல் இஸ்லாம் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. இதனால் அதிருப்தியடைந்த வீரர்கள், அவர் பதவி விலகுவதுடன் பகிரங்க மன்னிப்பும் கேட்க வேண்டும் என பி.சி.பி தலைவர் அமினுல் இஸ்லாம் புல்புல்லிடம் வலியுறுத்தியுள்ளனர்.

நிலைமை விபரீதமாவதை உணர்ந்த பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம், நஜ்முல் இஸ்லாமின் கருத்துக்கும் வாரியத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. அது அவரது தனிப்பட்ட கருத்து என்றும், இது குறித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாரியம் சமாதானப் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments