டெஹ்ரான்: ஈரானில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டங்களில் அமெரிக்கா தலையிட முயற்சித்தால், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அண்டை நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ஈரானிய அரசாங்கத்திற்கு எதிராக உள்நாட்டில் போராட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில், அதில் தலையிடப் போவதாக வாஷிங்டன் தரப்பிலிருந்து அச்சுறுத்தல்கள் வெளியாகின. இதற்கு பதிலடியாக, அமெரிக்க துருப்புக்களுக்கு இடமளித்துள்ள அண்டை நாடுகளிடம் ஈரான் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்துவதைத் தடுக்க அண்டை நாடுகள் முன்வர வேண்டும் என டெஹ்ரான் கோரிக்கை விடுத்துள்ளது.
தூதரக உறவுகளில் விரிசல் இதற்கிடையில், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araqchi) மற்றும் அமெரிக்க விசேட தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) ஆகியோருக்கு இடையிலான நேரடித் தொடர்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கத்தாரில் இருந்து வெளியேறும் அமெரிக்கப் படையினர்? மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க விமானப்படை தளமான கத்தாரிலுள்ள ‘அல் உெய்த்’ (Al Udeid) தளத்திலிருந்து சில அமெரிக்கப் பணியாளர்கள் இன்று மாலைக்குள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. சுமார் 10,000 துருப்புக்களைக் கொண்ட இந்தத் தளத்தின் பாதுகாப்பு குறித்து தற்போது கேள்வி எழுந்துள்ளது.
ஈரானிய உள்நாட்டுப் போராட்டங்களும், அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வுகளும் உலகளாவிய ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.


