பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவிருந்த “ஜனநாயகன்” திரைப்படத்தின் வெளியீடு தாமதமாகியுள்ளது.
இது தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல் என சிரேஷ்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.
மத்திய அரசாங்கத்தின் அரசியல் தலையீட்டினாலேயே இந்தத் தடை ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், இது குறித்து ராகுல் காந்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சு மற்றும் தணிக்கைச் சபை அதிகாரிகள் திட்டமிட்டே இப்படத்தின் சான்றிதழ் நடைமுறைகளைத் தடுத்து வருகின்றனர். இது பிராந்தியக் கலை வெளிப்பாடுகளை ஒடுக்கும் முயற்சியாகும். திரு. மோடி அவர்களே, தமிழ் மக்களின் குரலை உங்களால் ஒருபோதும் ஒடுக்க முடியாது.”
திரைப்படக் கலை என்பது தமிழ் மக்களின் கலாசார அடையாளத்துடன் ஆழமாக வேரூன்றியது என்பதையும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தளபதி விஜய் அவர்கள் தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் மூலம் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன்னதாக நடித்துள்ள இறுதித் திரைப்படம் இதுவாகும்.
இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருந்த நிலையில், மத்திய திரைப்படத் தணிக்கைச் சபை (CBFC) குறித்த காலப்பகுதிக்குள் U/A சான்றிதழை வழங்கத் தவறியதால் சர்ச்சை வெடித்தது.
சில வாரங்களுக்கு முன்பே தணிக்கைக்குழு படத்தை பார்வையிட்ட போதிலும், சான்றிதழ் வழங்கப்படாமையினால் தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தை நாடினர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தற்போது உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. இதனால் படத்தின் வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியின் தலையீட்டைத் தொடர்ந்து, ஏனைய எதிர்க்கட்சித் தலைவர்களும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
ஏ.ஐ.சி.சி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், அரசியல் நோக்கங்களுக்காக ஒரு கலைஞனின் படைப்பை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசாங்கம் தனது சித்தாந்தப் போராட்டங்களுக்குக் கலை மற்றும் பொழுதுபோக்குத் துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் இந்தியத் திரையுலகில் தணிக்கை முறை மற்றும் படைப்புச் சுதந்திரம் குறித்த பாரிய விவாதங்களை மீண்டும் தோற்றுவித்துள்ளது.


