எல்லை பாதுகாப்பு படையினர் வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவல்காரர்களை இந்தியாவிற்குள் அனுமதிப்பதாகவும், இதற்கு பின்னால் மத்திய அரசின் திட்டம் இருப்பதாகவும் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;-
“இஸ்லாம்பூர், சீதாய், சோப்ரா மற்றும் பல எல்லைப் பகுதிகள் வழியாக வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவல்காரர்களை இந்தியாவிற்குள் நுழைய எல்லை பாதுகாப்பு படையினர் அனுமதிப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. எல்லை பாதுகாப்பு படை மக்களை சித்திரவதை செய்து மாநிலத்தை சீர்குலைக்க முயற்சிக்கிறது.
இதற்குப் பின்னால் மத்திய அரசின் திட்டம் உள்ளது. அவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் அரசின் மீது பழிசுமத்த முயற்சிக்கிறார்கள். எல்லையின் இருபுறமும் அமைதி நிலவ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அண்டை நாடான வங்காளதேசத்துடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது. ஊடுருவல்காரர்கள் எங்கு தங்கியுள்ளனர் என்பதை கண்டறியுமாறு டி.ஜி.பி. ராஜீவ் குமாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.