திருச்சி முன்னாள் எஸ்.பி.,யும் தற்போதைய டி.ஐ.ஜி.,யுமான வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பேசுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வருண்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.
முன்னதாக டி.ஐ.ஜி. வருண்குமார், சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அது தொடர்பாக விளக்கத்தை சீமான் அளித்திருந்தார். ஆனால் தங்கள் கேள்விகள் எதற்கும் பதில் அளிக்கவில்லை என கூறிய வருண்குமார், திருச்சி குற்றவியல் கோர்ட்டில் சீமான் மீது வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில் “சீமான் தன்னையும் தனது குடும்பத்தினரையும் பல்வேறு பேட்டிகள் பொதுக்கூட்டங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியும் தனிப்பட்ட விதத்தில் மிரட்டுவதால் தங்கள் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகி இள்ளோம். எனவே சீமான் தனக்கு இரண்டு கோடி ரூபாய் நஷ்ட ஈடாக தர வேண்டும் .அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகார் தொடர்பாக இன்று (30ம் தேதி) திருச்சி கோர்ட்டில் வருண்குமார் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று திருச்சி குற்றவியல் கோர்ட்டில் வருண்குமார் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். தனிப்பட்ட வழக்கு என்பதால் வருண்குமார், காவல் சீருடையில் இல்லாமல், சாதாரண உடையிலேயே கோர்ட்டில் ஆஜரானார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சீமான் தனியாக சந்தித்து மன்னிப்பு கேட்பதாக தொழிலதிபர் ஒருவர் மூலமாக தூது விட்டார். நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.. பொதுவெளியில் மன்னிப்பு கேட்க தயாராக இருந்தால் கோர்ட்டில் அதை தெரிவிக்கட்டும். சீமான் இனிமேல் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். தமிழ்நாடு சீமான் மீது தற்போது கிரிமினல் வழக்கு தொடர்ந்து உள்ளேன்; அடுத்தகட்டமாக சிவில் வழக்கு தொடர இருக்கிறேன்.
சீமானின் பேச்சுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி தருவேன். என்னை மிரட்டி பார்க்க முடியாது. அதற்கான ஆள் நான் இல்லை” என்று வருண்குமார் கூறினார்.