அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் குவைத் புறப்பட்டார் பிரதமர் மோடி. குவைத்தின் அமீர், ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பின் பேரில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி இன்று மற்றும் நாளை என 2 நாள் பயணமாக, குவைத் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 43 ஆண்டுகளுக்குப் பிறகு வளைகுடா நாட்டிற்கு இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். கடைசியாக 1981-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி குவைத் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்பிறகு தற்போதுதான் பிரதமர் மோடி செல்லவிருக்கிறார்.
குவைத் செல்லும் பிரதமர் மோடி தலைமையுடன் உயர்மட்ட விவாதங்களில் ஈடுபடுவதோடு, குவைத் பட்டத்து இளவரசரையும் தனியே சந்திக்க உள்ளார். குவைத் பிரதமருடன் தூதரக அளவிலான பேச்சுக்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. பட்டத்து இளவரசர் அளிக்கும் விருந்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
மேலும் சமூக நிகழ்வில் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் உரையாடவும், தொழிலாளர் முகாமுக்குச் செல்லவும், குவைத் அமீர் சிறப்பு விருந்தினராக 26வது அரேபிய வளைகுடா கோப்பை தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்.
இதுதொடர்பாக, இன்று காலை பிரதமர் மோடி வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தள பதிவில், “இன்றும் நாளையும் நான் குவைத் செல்கிறேன். இந்த பயணம் குவைத்துடனான இந்தியாவின் வரலாற்றுத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும். குவைத் நாட்டின் இளவரசர் மற்றும் குவைத் பிரதமரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இன்று மாலை நான் அங்குள்ள இந்திய சமூகத்தினருடன் உரையாடுவேன், அரேபிய வளைகுடா கோப்பையின் தொடக்க விழாவிலும் கலந்துகொள்வேன்” என்று பதிவிட்டுள்ளார்.