கனடாவின் ஒன்ராறியோ மாகாணம், ஹமில்டனில் அமைந்துள்ள ஸ்டெல்கோ (Stelco) உருக்காலையில் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்ட 175 ஊழியர்களை மீண்டும் பணியில் இணைப்பது தொடர்பில், கனேடிய தொழில்துறை அமைச்சர் மெலானி ஜோலியுடன் கலந்துரையாடுவதற்கு கிளீவ்லேண்ட்-கிளிஃப்ஸ் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட கிளீவ்லேண்ட்-கிளிஃப்ஸ் நிறுவனம், 2024ஆம் ஆண்டு ஸ்டெல்கோவை கையகப்படுத்தியபோது கனேடிய அரசாங்கத்துக்கு வழங்கிய 34 உறுதிமொழிகளையும் முழுமையாக நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் கடப்பாடுகள் தொடர்பில் விரிவான ஆய்வை மேற்கொண்ட பின்னரே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும், வேலைவாய்ப்பு தொடர்பான உறுதிமொழிகளும் இதில் உள்ளடங்குவதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி லோரென்சோ கோன்சால்வெஸ், ஹமில்டனில் பாதிக்கப்பட்ட ஊழியர்களை விரைவில் மீண்டும் பணியில் இணைப்பதற்கான தீர்வொன்றைக் காண விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இதற்காக அமைச்சர் மெலானி ஜோலியுடன் சந்திப்பொன்றை நடத்தவும் நிறுவனம் கோரியுள்ளது.
எனினும், இந்தக் கோரிக்கைக்கு அமைச்சர் இதுவரை பதிலளிக்கவில்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.
500 ஊழியர்கள் வரை பாதிப்பு
கடந்த செப்டம்பர் 28ஆம் திகதி, ஹமில்டன் மற்றும் நான்டிகோக் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ஸ்டெல்கோ நிறுவனத்தின் ஆலைகளில் 500 ஊழியர்கள் வரை பணிநீக்கத்தால் பாதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டது.
அமெரிக்கா கனேடிய உருக்கு இறக்குமதிகளுக்கு விதித்துள்ள 50 சதவீதம் வரையிலான வரிகள், சந்தை நெருக்கடி மற்றும் விற்பனை வீழ்ச்சி ஆகியவற்றைக் காரணமாகக் குறிப்பிட்டு, ஹமில்டன் ஆலையின் சில உற்பத்தி நடவடிக்கைகளை நிறுத்த நிறுவனம் தீர்மானித்தது.
இதனால், ஹமில்டன் ஆலையில் குளிர் உருட்டப்பட்ட மற்றும் பூச்சிடப்பட்ட உருக்கு உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படவுள்ளன. பாதிக்கப்படும் சில ஊழியர்களுக்கு நான்டிகோக் ஆலையில் வேலைவாய்ப்புகளை வழங்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அரசாங்கத்தின் எச்சரிக்கை
இதற்கிடையில், 2024ஆம் ஆண்டு ஸ்டெல்கோ நிறுவனத்தைக் கையகப்படுத்துவதற்கு அனுமதி வழங்கியபோது, கனேடிய அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு உறுதிமொழிகளை நிறுவனம் மீறுவதாக அமைச்சர் மெலானி ஜோலி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அக்டோபர் 22ஆம் திகதி அனுப்பிய கடிதத்தில், குறித்த உறுதிமொழிகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நிறுவனத்துக்கு 15 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
காலக்கெடுவுக்குள் தீர்வு காணத் தவறினால், நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், நிறுவனத்தின் உரிமையை விலக்கிக்கொள்ள உத்தரவிடுதல் அல்லது நாளொன்றுக்கு 10,000 கனேடிய டொலர்கள் வரை அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் பரிசீலிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், கனேடிய உருக்குத் தொழில்துறைக்கு நன்மையளிக்கும் கொள்கைகளை ஆதரிப்பதாக உறுதியளித்த நிறுவனம், கனேடிய உருக்கு மீதான அமெரிக்க வரிகளை ஆதரிப்பது முரண்பாடானது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், தாம் அரசாங்கத்துக்கு வழங்கிய உறுதிமொழிகளை மீறவில்லை என கிளீவ்லேண்ட்-கிளிஃப்ஸ் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் இணைப்பது தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறுமா என்பதும், இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் செல்லுமா என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


