Tuesday, October 6, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்2,345 அரச பாடசாலைகளுக்கு அதிவேக ஃபைபர் இணைய வசதி

2,345 அரச பாடசாலைகளுக்கு அதிவேக ஃபைபர் இணைய வசதி

இலங்கையிலுள்ள 2,345 அரச இடைநிலைப் பாடசாலைகளுக்கு புதிய அதிவேக ஃபைபர் இணைய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், 2027 மற்றும் 2028ஆம் ஆண்டுகளில் நாட்டிலுள்ள 3,832 ஆரம்பப் பாடசாலைகளுக்கும் இந்த வசதியை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) அதன் “கிராமத்துடன் தொடர்பாடல்” திட்டத்தின் கீழும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

நாடு முழுவதும் உள்ள 6,225 இடைநிலைப் பாடசாலைகளுக்கு அதிவேக ஃபைபர் இணைய வசதியை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் 1,264 பாடசாலைகள் ஏற்கனவே ஃபைபர் இணைய இணைப்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது மேலும் 2,345 பாடசாலைகளுக்கு புதிய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

எஞ்சியுள்ள 2,616 இடைநிலைப் பாடசாலைகளுக்கும் தற்போது இந்த வேலைத்திட்டத்தின் கீழ் ஃபைபர் இணைய இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுவரை புதிதாக இணைய வசதி வழங்கப்பட்ட 2,345 பாடசாலைகளில் கிழக்கு மாகாணத்தில் 347 பாடசாலைகளும், வடமேல் மாகாணத்தில் 334 பாடசாலைகளும், சபரகமுவ மாகாணத்தில் 303 பாடசாலைகளும், தென் மாகாணத்தில் 300 பாடசாலைகளும், மேல் மாகாணத்தில் 285 பாடசாலைகளும், மத்திய மாகாணத்தில் 275 பாடசாலைகளும், ஊவா மாகாணத்தில் 176 பாடசாலைகளும், வடக்கு மாகாணத்தில் 172 பாடசாலைகளும், வடமத்திய மாகாணத்தில் 153 பாடசாலைகளும் அடங்குகின்றன.

இதனிடையே, பாடசாலைகளுக்கு வரையறையற்ற இணையப் வசதி வழங்குவதற்காக 2026ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் மூலம் 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு பாடசாலைக்கான மாதாந்த இணைய பக்கேஜ் கட்டணம் 5,130 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக, 2027/2028ஆம் ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 3,832 ஆரம்பப் பாடசாலைகளுக்கும் அதிவேக இணைய வசதி வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் இலங்கையின் அனைத்து பாடசாலைகளுக்கும் அதிவேக இணைய இணைப்பை வழங்குவதே இறுதி இலக்காகும்.

டிஜிட்டல் கல்வி மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி மறுசீரமைப்புகளுக்கு ஆதரவளிப்பதுடன், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் என அனைத்து பகுதிகளிலும் உள்ள மாணவர்களுக்கு நவீன தகவல் தொழில்நுட்பக் கருவிகளை சமமாக அணுகுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments