2026ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிப்புகள் ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் அதிகாரப்பூர்வமாகத் ஆரம்பமாகியுள்ளன.
இதன் தொடக்கமாக மருத்துவப் பிரிவுக்கான (Physiology or Medicine) வெற்றியாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த ஆண்டிற்கான மருத்துவப் பிரிவு நோபல் பரிசானது, விஞ்ஞானிகள் கார்ல் டீசெராத் (Karl Deisseroth), பீட்டர் ஹெஜெமான் (Peter Hegemann) மற்றும் ஜார்ஜ் நாகல் (Georg Nagel) ஆகிய மூவருக்கு கூட்டாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒளியைக் கொண்டு செல்களைக் கட்டுப்படுத்தும் ‘ஆப்டோஜெனெட்டிக்ஸ்’ (Optogenetics) துறையில் இவர்கள் செய்த அரும்பெரும் சாதனைகளுக்காக இந்த உயரிய விருது இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நரம்பியல் மற்றும் ஒளிசார் உயிரியல் துறையில் இவர்கள் நிகழ்த்திய ஆய்வுகள் மருத்துவ வரலாற்றில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, ஒளியைப் பயன்படுத்தி மூளையின் நரம்பு செல்களை மிகத்துல்லியமாக இயங்கச் செய்யும் அல்லது கட்டுப்படுத்தும் முறையை இவர்கள் கண்டறிந்தனர்.
இவர்களின் இந்த அற்புதமான கண்டுபிடிப்புதான் பார்கின்சன் நோய், குருட்டுத்தன்மை மற்றும் பிற தீவிர மூளை நரம்பு மண்டல கோளாறுகளுக்கு எதிர்காலத்தில் புதிய மற்றும் எளிதான சிகிச்சைகளைக் கண்டறிய பெரிதும் உதவியாக இருக்கும்.
ஸ்வீடனில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் (Karolinska Institute) நோபல் குழுவினரால் இந்த ஆண்டுக்கான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள அறிவியல் அறிஞர்கள் வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மருத்துவத் துறையைத் தொடர்ந்து இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான இந்த ஆண்டின் பிற நோபல் பரிசுகளும் அடுத்தடுத்த நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.


