இலங்கையில் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்கான “சமூக ஊடகக் குறைந்தபட்ச வயது” (Social Media Minimum Age Bill) எனும் தனிநபர் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவினால் இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களை அணுகுவதைக் கட்டுப்படுத்துவதும், தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதும் இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்தச் சட்டத்தின் மூலம், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகத் தளங்களை அணுகுவதைத் தடுப்பதற்கு, சம்பந்தப்பட்ட அமைச்சரான சிறுவர் விவகார அமைச்சருக்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் கிடைக்கிறது.
அத்துடன், ஒரு பிள்ளை ஒரு நாளில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக்கூடிய நேரத்தைச் சுருக்குவதற்கோ அல்லது பயன்படுத்துவதற்கான குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயிப்பதற்கோ இந்தச் சட்டத்தின் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கிறது.
இந்தச் சட்டத்தைச் செயற்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கீழ் அங்கீகாரம் பெற்ற ஆணையாளர் ஒருவரை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


