Saturday, July 25, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்110 மில்லியன் பெறுமதியான கொக்கைனுடன் வௌிநாட்டுப் பிரஜை கைது!

110 மில்லியன் பெறுமதியான கொக்கைனுடன் வௌிநாட்டுப் பிரஜை கைது!

சுமார் 110 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 79 வயதான ஸ்பெயின் நாட்டுப் பிரஜை என அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.

விவசாயப் பொறியியலாளரான இவர், கடந்த 22ஆம் திகதி சியரா லியோனிலிருந்து (Sierra Leone) அடிஸ் அபாபா மற்றும் தோஹா வழியாகக் கட்டார் எயார்வேஸுக்குச் சொந்தமான QR654 எனும் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

சந்தேகநபர் கையடக்கப் பையாகக் கொண்டு வந்த பயணப் பையைச் சுங்க அதிகாரிகள் சோதனைக்குட்படுத்திய போதிலும், அதில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், அவரது மற்றொரு பயணப் பை அந்த விமானத்தில் வராத காரணத்தினால், வழக்கமான வருகைக்கான நடைமுறைகளை முடித்த பின்னர் விமான நிலையத்திலிருந்து வெளியேற அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

தாமதமான அந்தப் பயணப் பை பின்னர் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதுடன், அதனைப் பொறுப்பேற்பதற்காகச் சந்தேகநபர் நேற்று (24) மாலை 6.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திற்கு வந்துள்ளார்.

அந்தப் பயணப் பையை விடுவிப்பதற்கு முன்னர், இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் அதனை எக்ஸ்-ரே (X-Ray) பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, சந்தேகத்திற்குரிய பொருட்கள் இருப்பது அவதானிக்கப்பட்டதால் முழுமையான சோதனையை மேற்கொண்டனர்.

இதன்போது, அந்தப் பயணப் பையிலிருந்த இரு கோப்பு தாங்கிகளுக்குள் (File Holders) மிகவும் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கொக்கைன் பொதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அவற்றின் மொத்த எடை 2.198 கிலோகிராம் என்பதுடன், அதன் சந்தைப் பெறுமதி சுமார் 109.9 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் இலங்கை சுங்கம் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட கொக்கைன் போதைப்பொருளையும் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments