வங்காள விரிகுடா கடலில் 36 நாள்களுக்கும் மேலாகத் தத்தளித்த நிலையில் இருந்த இலங்கை மீனவர்கள் இருவர், பங்களாதேஷின் கொக்ஸ் பாசார் மாவட்டம் மஹேஷ்காலி பகுதியைச் சேர்ந்த மீனவர்களால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணியளவில், வங்காள விரிகுடாவின் சோனாசார் பகுதிக்கு அருகில் படகு ஒன்றில் தத்தளித்த குறித்த இருவரையும் பங்களாதேஷ் மீனவர்கள் கண்டுபிடித்து, தமது படகில் ஏற்றி மஹேஷ்காலி கடற்கரைக்குப் பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் இலங்கையின் தெவிநுவர பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய எஸ்.எச். சமிந்த மற்றும் 30 வயதுடைய அவரது மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உணவு மற்றும் குடிதண்ணீர் இன்றி 36 நாள்களுக்கும் மேலாகக் கடலில் தத்தளித்த அவர்கள், பச்சையாக மீன்களை உணவாக உட்கொண்டு உயிர் தப்பினர் என்று விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் எவ்வாறு கடலில் தத்தளித்தனர் மற்றும் உண்மையில் 36 நாள்கள் வங்காள விரிகுடாவில் கழித்தார்களா என்பது குறித்துப் பங்களாதேஷ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பங்களாதேஷ் பொலிஸார் தெரிவித்தனர்.


