யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா, பதுளை சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்திற்குத் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறித்து யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் கடந்த 29.05.2026 அன்று நடைபெற்ற யாழ். சட்டத்தரணிகள் சங்கத்தின் அவசரப் பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய,
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 30.05.2026 திகதியிடப்பட்ட உத்தியோகபூர்வ கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
நீதிபதி ஏ.ஜி. அலெக்ஸ்ராஜா கடந்த 22.04.2026 அன்றுதான் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார்.
அவர் பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைவதற்குள், மே 31 முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமைக்கு எவ்வித நியாயமான காரணங்களும் வெளிப்படுத்தப்படவில்லை.
இதனால் இதற்குப் பின்னால் ஏதோவொரு வெளிப்புறத் தலையீடு இருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
சில பேராணை மனுக்களில் எதிர்மனுதாரராகக் குறிப்பிடப்பட்டிருந்த வட மாகாண ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்ற நீதிபதி சில இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார் (அவை பின்னர் ரத்துச் செய்யப்பட்டு, நீடிக்கப்படவில்லை).
இந்த உத்தரவுகள் காரணமாகவே இந்தத் திடீர் இடமாற்றம் நிகழ்ந்திருக்கலாம் எனச் சங்கத்தின் உறுப்பினர்கள் நம்புகின்றனர்.
குறித்த ஆளுநர், அரசாங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட சில அதிகாரிகளுக்கு கடிதம் மூலமாகவோ அல்லது நேரடியாகப் பேசியோ இந்த விவகாரத்தில் தலையிடுமாறு கோரியிருந்ததாகத் தமக்கு நம்பகமான வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாகச் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நீதிபதிகளை இடமாற்றம் செய்வது நீதிச் சேவை ஆணைக்குழுவின் முழுமையான அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதை ஏற்றுக்கொண்ட போதிலும்,
எவ்வித விளக்கமுமின்றி வெளிப்படைத்தன்மையற்ற முறையில்,
திடீரென வழங்கப்படும் இடமாற்றங்கள் மற்றும் அரசாங்கத்தின் நிறைவேற்றுத்துறையின் தலையீடுகள் என்பன நீதித்துறையின் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையைச் சீர்குலைத்துவிடும் என யாழ். சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
“நீதித்துறையின் செயல்பாடுகளில் மிகச் சிறிய அளவிலான தலையீடு இருப்பதாக ஒரு தோற்றம் உருவாவது கூட மிகவும் பாரதூரமான விடயமாகும்” எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, நாட்டின் தலைவர் என்ற ரீதியில் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, இந்த விவகாரத்தை முதன்மைப் பணியாக எடுத்துக்கொண்டு உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என ஜனாதிபதியைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், இந்த விடயம் குறித்து நேரில் கலந்துரையாடுவதற்குத் தங்களுக்கு அவசரச் சந்திப்பு ஒன்றிற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறும் யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


