அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவை விமானம் ஒன்று, மின்னல் தாக்கத்திற்கு உள்ளானதை அடுத்து, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மீண்டும் அவசரமாகத் திருப்பி அனுப்பப்பட்டதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
யு.எல். 606 (UL 606) ரக விமானம் இன்று (12) அதிகாலை 1:00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிட்னி நோக்கிப் புறப்பட்ட நிலையில், மின்னல் தாக்கத்திற்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், விமானி அதிகாலை 1:40 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை மீண்டும் பாதுகாப்பாகத் தரையிறக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர், மாற்று விமானம் ஒன்றின் மூலம் குறிப்பிட்ட பயணிகள் குழுவினர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரம் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக விமானப் பயணம் 5 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் தாமதமாகியுள்ளது.
இச்சம்பவத்தினால் பயணிகள் எவருக்கும் அல்லது விமானத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.


